வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (15/04/2018)

கடைசி தொடர்பு:05:15 (15/04/2018)

`நியூட்ரினோ திட்டத்தை தேனிக்குள் நுழையவிட மாட்டோம்' - தங்கத் தமிழ்செல்வன்!

நியூட்ரினோ திட்டத்தை தேனிக்குள் நுழையவிட மாட்டோம் என தங்கத் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

நியூட்ரினோ திட்டத்தை தேனிக்குள் நுழையவிட மாட்டோம் என தங்கத் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

தங்கத் தமிழ்செல்வன்

தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள அம்பரப்பர் மலையில், சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ துகள் ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் போராடி வருகிறார்கள். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் இருந்து பத்து நாள் நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சார நடைபயணம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, டி.டி.வி தினகரன் தலைமையில் அடுத்த மாதம் 4-ம் தேதி தேனியில் கண்டன ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஆர்பாட்டத்திற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக தங்கத் தமிழ்ச்செல்வனிடம் பேசிய போது, ‘’முதலில், அனுமதி தருகிறோம் என்று சொன்னார்கள். இப்போது அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம். மத்திய அரசின் பேச்சைக் கேட்டுக்கொண்டு நியூட்ரினோ திட்டத்தை தேனியில் செயல்படுத்தப்பார்க்கிறார்கள். இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவர்கள் அனுமதி கொடுக்கவில்லையென்றால் என்ன, நீதிமன்றம் சென்று ஆர்பாட்டம் நடத்த அனுமதி பெறுவோம். லட்சக்கணக்கானோரை திரட்டி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவோம். நியூட்ரினோ திட்டத்தை தேனிக்குள் நுழையவிட மாட்டோம்’’ என்றார்.