Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

” அழைப்பு வந்தது.. ஆனால் ஏற்கவில்லை!” - பிரதமர் விழாவைப் புறக்கணித்த புதுச்சேரி முதல்வர்

”காவிரிக்காகத்தான் பிரதமர் விழாவைப் புறக்கணித்தேன்” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்க்கிறார்.

நாராயணசாமி

புதுச்சேரியில் தற்போதிருக்கும் நாராயணசாமி தலைமையிலான அரசை முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேற்று முன் தினம் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “சென்னையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியைத் துவங்கி வைக்கக் கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அந்த விழாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்தும், ராணுவத்திடம் இருந்தும் அழைப்புக் கடிதம் எனக்கு வந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்காததால் பிரதமர் கலந்து கொண்ட அந்த விழாவை நான்  புறக்கணித்தேன். காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகம்-புதுச்சேரிக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுக் காலம் அமைதியாக இருந்த முன்னாள் முதல்வர் ரங்கசாமி தற்போது வாய் திறந்திருக்கிறார். எங்கள் அரசுக்கு என்.ஆர்.காங்கிரஸ் உறுதுணையாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பங்கேற்கவில்லை. வாரியம் அமைப்பதற்காகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போதும் அவர்கள் பங்கேற்கவில்லை. இதிலிருந்து காரைக்கால் விவசாயிகள் மீதும், மக்களின் மீதும் அவர்களுக்கு உள்ள அக்கறை என்ன என்பது தெளிவாகிறது.

ரங்கசாமி

காவிரிக்கான நடைபெற்ற பந்த் போராட்டத்திற்கும் அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், நரேந்திர மோடியின் ஏஜெண்டாகவும் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி செயல்பட்டு வருகின்றார். சென்னை வந்த பிரதமரிடம் தமிழக முதலமைச்சரும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் கடிதம் அளித்தும் பிரதமர் மோடியிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. பலமுறை நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் காவிரி மேலாண்மை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தினேன். ஆனால் இந்த விவகாரத்தில் ரங்கசாமி அப்பட்டமான பொய்யைக் கூறுகிறார்.

உண்மையிலேயே காரைக்கால் விவசாயிகள் மீது அவருக்கு அக்கறை இருந்தால் ஏன் நேரடியாகப் பிரதமரை சந்தித்து இது குறித்து வலியுறுத்தவில்லை ? அமித்ஷாவை சந்தித்தபோது கூட இது குறித்துப் பேசாதவருக்கு புதுச்சேரி அரசை விமர்சிக்கத் தகுதியில்லை. தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் ரங்கசாமி காங்கிரஸ் ஆட்சியைக் குறை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு வருடமாக தூங்கிக் கொண்டிருந்த ரங்கசாமி இப்போதுதான் விழித்திருக்கிறார். போதி மரத்தடியில் அமர்ந்த புத்தர் போலப் பேசுகிறார். புதுச்சேரி மாநிலத்தைக் குட்டிச்சுவர் ஆக்கியது ரங்கசாமி தலைமையிலான அரசுதான். புதுச்சேரி மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச அரிசி தொடர்பான கோப்பு துணைநிலை கவர்னர் அலுவலகத்தில் தூங்குகிறது. அரிசிக்கான பணத்தை நேரடியாக பொதுமக்களுக்குத் தர வேண்டும் என்று கூறுகிறார் கவர்னர். ஆனால் அரிசியைத் தர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆளுநரால்தான் இலவச அரிசித் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுப் பொறுப்பையும் அவரேதான் ஏற்க வேண்டும்” என்றார்.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement