தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை; அவசர கதியில் கிளம்பிய முதல்வர்! - குழப்பத்தில் முடிந்த மதுரை விழா

மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாததால் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகைதந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

27 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கான பூமி பூஜையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மேடைக்கு வந்தனர்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வந்த அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.  அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் முதல்வர், துணை முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்கள். வழக்கமாக அரசு நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபு. ஆனால், முதல்வர் கலந்து கொண்ட இந்த  விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை. இது பலரையும் முணுமுணுக்க வைத்தது.

கலெக்டர் வீரராகவராவ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்து, முதலமைச்சர் பேசுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் வழக்கமான டிரேட் மார்க் சிரிப்பை மட்டும் உதிர்த்து வணக்கம் போட்டுவிட்டு பேசாமல் கிளம்பினார் முதல்வர். இதனால் எல்லோரும் குழம்பிப் போனார்கள். முதல்வர் கிளம்பி விட்டார் என்று சொல்லப்பட்டது.

இதைப்பற்றி எந்த அறிவிப்பும் செய்யாததால் வந்திருந்த பொதுமக்கள் கலைந்து போகாமல் அமர்ந்திருந்தனர். அடுத்து திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திண்டுக்கல் கிளம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!