`மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது!’ - கொதிக்கும் வைகோ

`நரேந்திர மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு காலமும் அமைக்காது; அமைக்க போவதும் இல்லை. தமிழக அரசு தமிழ் நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் வஞ்சக திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்ற எந்த மிஷின் உள்ளே வந்தாலும் அதை அடித்து நொறுக்க வேண்டும்’ என என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரில் பேசினார்.

வைகோ

உலகத் தமிழர்கள் பேரமைப்பு சார்பில் சசிகலா கணவர் நடராசன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. இதில், பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டி.டி.வி. தினகரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். நடராசன் படத்தை வைகோ திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செய்தார். பழ.நெடுமாறன் எழுதிய `நட்பின் சிறந்த  நண்பர் நடராசன்’ என்ற நூலை நடராசனின் சகோதரர் சாமிநாதன் வெளியிட டி.டி.வி.தினகரன் பெற்றுக் கொண்டார். இதில் பேசியவர்கள் அனைவரும் நடராசன் புகழ் குறித்தும், முள்ளிவாய்க்கால் முற்றம் அமைவதற்கு அவர் துணையாக இருந்தது குறித்தும் பாராட்டி பேசினார்கள். நான் மறைந்து என் படத்தை  நடராசன் திறந்து வைப்பார் என்றிருந்த நிலையில் அவர் மறைந்து அவர் படத்தை நான் திறந்து வைக்கிற துர்பாக்கிய நிலையில் இருக்கிறேன் என கண்கள் கலங்க பேசினார் பழ.நெடுமாறன்.

பின்னர் பேசிய வைகோ, `ஈழத்து மக்களை கொடும்பாவி ராஜபக்‌ஷே அரசு கொன்று குவித்ததோடு, அவர்கள் மீது சொல்ல முடியாத பல செயல்களைச் செய்தது. அந்த சாட்சியின் சுவடுகள் எல்லாம் அங்கே அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தமிழகத்தில் தஞ்சாவூரில் சாட்சியாக நிற்கிறது இந்த முள்ளிவாய்க்கால் முற்றம். இதைக்கட்ட எண்ணியது பழ.நெடுமாறன், செயல்படுத்தியது நடராசன். 
நடராசன் அதிகார பொறுப்பிற்கு வந்திருந்தால் தமிழ் ஈழம் மலந்திருக்கும்’ என்று பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, `நரேந்திர மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு காலமும் அமைக்காது; அமைக்கப் போவதும் இல்லை. தமிழக அரசு, மக்களைத் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. இப்போது போராடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் உள்பட அனைவரின் போராட்டத்தையும்  அடக்குமுறையைப் பிரயோகித்து, அச்சுறுத்தி தடுக்க வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதை  நான் எடப்பாடி பழனிசாமி அரசிற்கு சொல்கிறேன், கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே. இந்த அடக்கு முறையை எல்லாம் பயன்படுத்த நினைக்காதீங்க. மக்கள் மனநிலை கொதி நிலையில் இருக்கிறது.

ஸ்டெர்லைட், நியூட்டிரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எல்லாம் எதிர்த்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வஞ்சகம் துரோகம் செய்யும் மத்திய அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்கு துணை போன உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதியை ஆயிரம் அடிக்குக் கீழே குழிதோண்டி புதைத்திருக்கிறார். இத்தனை கொடுமைகள் நடந்திருக்கும் நிலையில் கர்நாடக அரசை  மேகத்தாட்டு,ராசி மணலில் அணைகள் கட்ட வைத்து, மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் கூட வரவிடாமல் செய்து தமிழகத்தை பஞ்ச பிரதேசமாக, பாலைவனமாக மாற்றுவதோடு ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி  தமிழகத்தை நைஜீரியாவாக, எத்தியோப்பியாவாக மாற்ற  நினைக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் வஞ்க திட்டங்களை செயல்படுத்த எந்த மிஷின் உள்ளே வந்தாலும், இன்னமும் மக்கள் திரண்டு அதை அடித்து நொறுக்க வேண்டும். இளைஞர்களே தயாராகுங்கள் மத்திய அரசே நெருப்போடு விளையாடாதீர்கள் என எச்சரிக்கிறேன்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!