தூத்துக்குடி பனிமய அன்னை ஆலயம் முன்பு கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்! #BanSterlite

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பனிமய அன்னை பேராலயம் முன்பு கறுப்புக்கொடி ஏற்றி, ஆலய வளாகத்திற்குள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கறுப்புக் கொடி

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள், லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பினர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய அன்னைப் பேராலயம் முன்பாக கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பைக் பேரணி செல்லத் திட்டமிட்டனர். ஆனால், நாளை கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்தநாள் விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (17ம் தேதி) காலை வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பேரணியாகச் செல்வதற்கும், கூட்டமாக அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் போலீஸார் தடை விதித்தனர். 

அதனால், பனிமய அன்னை பேராலய வளாகத்திற்குள் பந்தல் அமைத்து மணலில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். ஆலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள், மீனவர்கள் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை தூத்துக்குடி முழுவதும் அனைத்து வீடுகளிலும் கறுப்புக்கொடி  ஏற்றப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!