Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`தூத்துக்குடி ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’ - கொதிக்கும் காங்கிரஸ்

"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களைச் சமூக விரோதிகள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்" என இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்  குற்றம்சாட்டி உள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தின் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் தற்போது இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும் அ.குமரெட்டியாபுரம் தொடங்கி 10 கிராமங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களும் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆகிய பல சங்கத்தினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கோஷம் எழுப்பியபடியே, நடந்து சென்றனர். ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகயிட முயன்ற அவர்களை, ஆலைக்கு முன்பாகவே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது பேசிய வடக்கு மாவட்ட  இளைஞர் காங்கிரஸ் தலைவர் குணசேகரன்," தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகவே செயல்படுகிறார். மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கவில்லை. இத்தகைய போராட்டத்தையும் மக்களின் பாதிப்புகளையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல், ஆலைக்கு எதிராகப் போராடி வரும் போராட்டக்காரர்களை சமூகவிரோதிகள் என தரக் குறைவாக பேசி உள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

நிலத்தையும், நீரையும், காற்றையும் எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் உயிரையும் பாதுகாத்திட வலியுறுத்தி போராடி வரும் மக்கள் சமூக விரோதிகளா? .இந்த ஆலையால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றால், ஏன் 10 கிராம மக்கள் போராட வேண்டும். அவர்களது போராட்டம் நியாயமானது. வாழ்வாதாரத்தைக் காக்கும் போராட்டம்.  மக்களின் உடல் நலத்தையும் சுற்றுபுறச் சூழலையும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த ஆலை தூத்துக்குடியில் இயங்கக்கூடாது. மகாராஷ்டிர மாநிலத்தில் விரட்டி அடிக்கப்பட்டதைப் போல நாமும் விரட்டி அடிப்போம். இந்த ஆலை நிரந்தரமாக மூடிட இதுவே முதல் போராட்டம். இது மூடப்படும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்" என்றார். தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement