வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (15/04/2018)

கடைசி தொடர்பு:08:41 (16/04/2018)

‘குறும்படக் குழுவினரை நெகிழவைத்த டிராஃபிக் டி.எஸ்.பி’

போலீஸ்

ஏப்ரல் 15-ம் தேதி விடியற்காலை 3 மணி. கல்லூரி மாணவர்களோடு கூடிய குறும்படக் குழு ஒன்று குறும்படம் ஒன்றை ஈரோடு சத்தியமங்கலம் சாலையில் ஷூட் செய்துகொண்டிருந்தது. அந்தக் குறும்படத்தின் பெயர் ‘இரும்பு வெறியர்கள்’. பைக் ரேஸினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தக் குறும்படம் தயாராகிக் கொண்டிருந்தது.

போலீஸ்

பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்த வழியாக ரவுண்ட்ஸ் சென்ற ஈரோடு டிராபிக் டி.எஸ்.பி சேகர் அந்தக் குழுவினரைப்  பார்த்து வண்டியை நிறுத்தியிருக்கிறார். குறும்படம் குறித்து கேட்டறிந்த டி.எஸ்.பி சேகரிடம், ‘ஒரு காட்சியில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் சார்’ என அந்தக் குழுவினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். ‘மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் நீங்கள் குறும்படம் செய்கிறீர்கள். நல்ல முயற்சி’ எனப் பாராட்டிய டி.எஸ்.பி சேகர், சற்றும் யோசிக்காமல் தன்னுடைய போலீஸ் டீமுடன் ஒரு காட்சியில் நடித்துக் கொடுத்து அந்த குறும்படக் குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

போலீஸ்

இதுகுறித்து ‘இரும்பு வெறியர்கள்’ குறும்படத்தின் இயக்குநர் ஈரோடு சத்தியனிடம் பேசினோம். “ஈரோட்டின் முக்கியமான சாலைகளில் இரவு நேரங்களில் ஷூட்டிங் எடுக்க 2 நாள்கள் அனுமதி கேட்டு ஈரோடு எஸ்.பி மற்றும் ஈரோடு டிராஃபிக் டி.எஸ்.பி ஆகியோரிடம் முறைப்படி அனுமதி வாங்கினோம். அந்தவகையில், சனி, ஞாயிறு இரவுகளில் ஈரோட்டின் முக்கியப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்தினோம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ரவுண்ட்ஸ் வந்த டிராஃபிக் டி.எஸ்.பி சேகர் சார் எங்கள் குழுவைப் பார்த்து உற்சாகமூட்டும் வகையில் பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு காட்சியில் எங்களுக்காக நடித்துக் கொடுத்தார். கேட்ட உடனேயே டி.எஸ்.பி சார் நடிச்சிக் கொடுப்பாங்கன்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலை. ஈரோடு எஸ்.பி மற்றும் டிராஃபிக் டி.எஸ்.பி அவர்கள் கொடுத்த அனுமதிக்கும் உற்சாகத்துக்கும் நன்றி” என்றார்.