வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம் சொல்லும் உண்மை....

வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம் சொல்லும் உண்மை....

தமிழகம் மற்றும் கர்நாடக போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான சைமன், இன்று அதிகாலை 4 மணிக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

யார் இந்தச் சைமன்?

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஒட்டர்தொட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சைமன். இவர், சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக இருந்தவர். இவர், பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி சிறை சென்றவர்.  குறிப்பாக, வீரப்பனைப் பிடிக்க 60 பேர் கொண்ட வனக்காவல் படையைத் தமிழக அரசு முதன்முதலில் எஸ்.பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் உருவாக்கியது. இதற்குப் பதிலடி கொடுக்க நினைத்த வீரப்பன், 1993 ஏப்ரல் 9-ம் தேதி தமிழக கர்நாடக எல்லையான பாலாற்றில் சொரக்காய் மடுவு என்ற இடத்தில் கண்ணிவெடி வைத்து வனக்காவல் படை வாகனத்தைத் தாக்குகிறார். அந்தக் கண்ணிவெடி தாக்குதலில் 24 காவலர்கள் சுக்குநூறாக வெடித்துச் சிதறுகின்றனர். இந்தச் சம்பவத்தில் எஸ்.பி கோபாலகிருஷ்ணன், கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாகப் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அந்தச் சம்பவம், தமிழகம் - கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழக, கர்நாடக அரசால் தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக வீரப்பன் அறிவிக்கப்பட்டு, தமிழக -வீரப்பன் கூட்டாளி சைமன் கர்நாடக கூட்டு அதிரடிப்படை தொடங்கப்பட்டு, வீரப்பனைத் தீவிரமாகத் தேட ஆரம்பித்தது. இந்தக் கண்ணிவெடி வைத்த வழக்கு உள்பட நான்கு தடா வழக்குகளில், 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் சைமன் முக்கியக் குற்றவாளியாக 27 வயதில் கைதுசெய்யப்பட்டுச் சிறை செல்கிறார். சிறையில் இருந்தவாறே கண்ணிவெடி வைத்த வழக்கில் சைமனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது. பிறகு, அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, மைசூரு சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார் சைமன். 

சிறை வாழ்க்கை சைமனுக்குச் சிறுநீரக நோய்ப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. சைமனின் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டிக் கடந்த ஆறு மாதங்களாகச் சிறுநீரகப் பிரச்னைக்கு மைசூரு சிறை மருத்துவமனையிலும், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மைசூரு சிறை நிர்வாகம் தரமான, போதுமான சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கடுமையான வலியுடன் துடித்த சைமனுக்கு உயர் சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.00 மணிக்கு சைமன் உயிரிழந்தார். 

இதையடுத்து, பெங்களூருவில் இருந்து அவரது உடல், மாதேஸ்வரன் மலை அடுத்துள்ள ஒட்டர்தொட்டிக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். வீரப்பன் என்கவுண்டர் செய்யப்பட்டபிறகு, தமிழக மற்றும் கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளிகள் பலரும், ஒருவர்பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், இன்னும் பிற வீரப்பன் கூட்டாளிகளான ஞானபிரகாஷம், மீசைக்கார மாதையன், பிளவேந்தன், பெருமாள், ஆண்டியப்பன், வீரப்பன் அண்ணன் மாதையன் உள்ளிட்ட பலரும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருந்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!