தூத்துக்குடியில் 102 கிலோ கஞ்சா பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது | Ganja smuggling racket busted, Ganja smuggling racket busted, two arrested in thoothukudi arrested in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (16/04/2018)

கடைசி தொடர்பு:08:18 (16/04/2018)

தூத்துக்குடியில் 102 கிலோ கஞ்சா பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

விசாகப்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கடத்த இருந்த 102 கிலோ கஞ்சாவை தூத்துக்குடியில் போதைத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட  2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கஞ்சா கடத்தியவர்கள் கைது

தூத்துக்குடி வழியாக திருவனந்தபுரத்துக்கு காரில் கஞ்சா கடத்திச் செல்ல இருப்பதாக தூத்துக்குடி போதை தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீளவிட்டான் பாலத்தில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை போலீஸார் சோதனையிட்டனர். அதில் 4   மூட்டைகள் இருந்தன. அதனைப் பிரித்து பார்த்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. 25 கிலோ எடையில் 3 மூட்டைகளும், 27 கிலோ எடையில் ஒரு மூட்டை என மொத்தம 4 மூட்டைகளில் இருந்த 102 கிலோ கஞ்சா மூட்டைகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10.20 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர்.

காரில் வந்த இருவரை விசாரணை செய்ததில், தேனி மாவட்டம் ராஜாதோட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்ததோடு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை, நெல்லை உள்ளிட்ட செக்போஸ்ட்களில் போலீஸாரின் சோதனை அதிகமாக இருந்ததால் விருதுநகர்,  தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்குச் சென்று பின், அங்கிருந்து திருவனந்தபுரத்துக்கு கஞ்சாவைக் கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது முதல்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போதைத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுப் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க