வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (15/04/2018)

கடைசி தொடர்பு:08:05 (16/04/2018)

நெல்லை லட்சுமி நரசிம்மர் கோயிலில் தியானம் செய்த இலங்கை மாகாண முதல்வர்!

நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் இலங்கை கிழக்கு மாகாண முதல்வரான விக்னேஸ்வரன் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தார்.

நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் இலங்கை கிழக்கு மாகாண முதல்வரான விக்னேஸ்வரன் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார்.

லட்சுமி நரசிம்மர் கோயில்

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர்-சுரண்டை மெயின்ரோட்டில் லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சியளிக்கிறார். மூலவரான நரசிம்மர் உக்கிரத்துடன் 16 கரங்களுடன் இரண்யனை வதம் செய்த நிலையில் காட்சியளிக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன், நீண்ட கால வழக்குகளில் இருந்து விடுபடவும் எதிரிகளை எளிதில் வெல்லவும் நரசிம்மர் அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.

அதனால் இந்தக் கோயிலுக்கு ஏராளமான அரசியல்வாதிகள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோயிலின் சக்தியால் வெற்றி பெற்று முக்கியப் பதவிகளை அடைந்த பலர், மீண்டும் இங்கே வந்து வழிபடுகிறார்கள். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலுக்கு அண்மைக் காலமாக அரசியல்வாதிகள் அதிகமாக வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்துக்கு வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முதல்வரான விக்னேஸ்வரன் இன்று  நரசிம்மர் கோயிலுக்கு வருகை தந்தார். அவரை கோயிலின் அர்ச்சகரான ஆனந்தன் வரவேற்று அழைத்துச் சென்றார். கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். பின்னர் கோயில் பிராகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். 

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்

அவரது வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அவரது பிரார்த்தனை பற்றி பேசிய அவரது ஆதரவாளர்கள், ``இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக அவர் இருந்தபோதிலும், உரிய அதிகாரம் இல்லாத நிலையில் உள்ளார். அத்துடன், இலங்கை அரசால் தமிழர்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. வடக்கு மாகாணத்தில் நிலை கொண்டுள்ள சிங்களப் படைகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.

அத்துடன், தனிப்பட்ட வகையில் அவருக்கு சில பிரச்னைகள் இருக்கின்றன. அவை அனைத்திலும் இருந்து விடுபட வேண்டுமானால், கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை அவரது நலன் விரும்பிகள் தெரிவித்ததன் அடிப்படையில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டார். இங்கு வழிபாடு நடத்திய பின்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்'' என்கிறார்கள்.