வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (15/04/2018)

கடைசி தொடர்பு:07:58 (16/04/2018)

``ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் இருந்து என்னிடம் டீல் பேசினர்” - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

``ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்து போராடியவன் நான். முந்தைய தேர்தலின்போது, ஸ்டெர்லைட் ஆலை சார்பில் எனக்குப் பணம் கொடுத்தபோதுகூட அதைத் திருப்பி அனுப்பினேன். நான் பெட்டி வாங்கிவிட்டதாகப் பலரும் அவதூறு பரப்பி வருகிறார்கள்" என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன்பு 4 நாள்கள்  நான் உண்ணாவிரதம் இருந்தேன். அன்று மக்கள் யாருமே ஆதரவு தரத் தயாராக இல்லை. அனைவருமே வேலை கிடைக்கும் என்றே நினைத்திருந்தனர். அதனால் ஆலை எளிதாகத்  தொடங்கப்பட்டுவிட்டது. அப்போது அந்த ஆலை தரப்பில் என்னிடம் டீல் பேசினர். அவர்கள் அணுகியபோதும், தேர்தல் செலவுக்காக எனக்குப் பணம் கொடுத்தபோதும் மறுத்தவன் நான்.

அன்றைய காலகட்டங்களில் மாநிலத்தில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுகளே இந்த ஆலை இயங்க ஒப்புதல் அளித்தனர். ஆனால், இன்று பாதிப்பு இருக்கிறது என்றால் ஏன் வந்தது, எப்படி வந்தது, என சரி கட்ட வேண்டியது உள்ளது. 
ஸ்டெர்லைட் ஆலையுடன் ஊசி முனை அளவுகூட எனக்குத் தொடர்பு கிடையாது. உண்ணாவிரதம் இருந்து தோற்றுப் போனவன் நான். இந்த விவகாரத்தில் மாநில அரசு கவனித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உண்மையான பிரச்னை என்ன என்பதை மாநில அரசு கண்டுபிடிக்கட்டும். கூடங்குளம் திட்டம் வருவதற்கு முன்பு போராடிய நான், திட்டம் வந்த பிறகு அந்தத் திட்டம் வர வேண்டும் என்றே நான் கூறினேன்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் கவலையைப் பற்றியும் அரசு தனிக்  கவனம் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்தத் திட்டமும் நடைபெறக் கூடாது என்பதில் மிகக் கவனமாகவும், மிகக்கொடூரமாகவும் ஒரு இயக்கம் வேலை செய்து கொண்டு இருக்கிறது.

வளர்ச்சித் திட்டங்களை தடுப்பதில் பயங்கரவாத இயக்கங்களின் பின்னணி உள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகக்கவனமாகச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. ஜனநாயகத்தை மீறிய ஒரு சக்தி தமிழகத்தில் வந்து கொண்டு இருக்கிறது. யாரால் அவர்களுக்கு ஆபத்து வருகிறதோ அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உள்ளப்பூர்வமான ஆய்வை நடத்தி தடுக்கக் கூடிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாதிப்பு இல்லை என்றால் மக்களுக்காக இருக்கக் கூடிய அரசு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்க்கக் கூடியது கடமை, உத்தரவாதம் அளிக்கிறோம் எனக் கூற வேண்டியது அரசின் பொறுப்பு" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க