`இங்கு போராட்டம் நடத்தினால், பல வாட்டாள் நாகராஜன்கள் உருவாகுவார்கள்’ - பொன்னார் பேச்சு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள் மட்டுமின்றி, மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், திரைப்படத்துறையினர், இசைக்கலைஞர்கள் என தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இப்போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

பொன். ராதாகிருஷ்ணன், பொன்னார்

தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க தலைவர்களான தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா போன்றவர்கள் இப்போராட்டங்களுக்கு எதிராகத் தெரிவித்து வரும் கருத்துகள் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,‘காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இரு மாநிலங்களுக்கும் பொதுவானது. ஆனால், தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நாம் போராட்டத்தில் ஈடுபட்டால் கர்நாடகாவில் பல வாட்டாள் நாகராஜன்கள் உருவாகுவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டும் போதுமா ? காவிரியில் தண்ணீர் வரவழைக்க என்ன வழி? பா.ஜ.க யோசித்துச் செயல்படுகிறது” எனத் தெரிவித்தார். இவரது கருத்து பெரும் சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்துக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பழ. ராஜேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பழ, ராஜேந்திரன்இதுகுறித்து நம்மிடம் பேசிய  பழ.ராஜேந்திரன் ‘ காவிரிநீர் என்பது நமது வாழ்வாதாரம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதனைச் செயல்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. இதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் வெட்கித் தலைகுனிய வேண்டும். பா.ஜ.க-வில் இருக்கும் தன்னால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யமுடியவில்லையே என ஆதங்கப்பட்டு அக்கட்சியிலிருந்து அவர் வெளியேறி இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அறவழியில் போராடிக்கொண்டிருக்கிறோம். இங்குப் போராட்டம் நடத்தினால் கர்நாடகாவில் பல வாட்டாள் நாகராஜன்கள் உருவாகுவார்கள் என அவர் தெரிவித்திருப்பது , கன்னட அமைப்புகளை ஊக்கப்படுத்துவதாகவும், அங்கு வன்முறை போராட்டங்களைத் தூண்டிவிடுவதாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மக்களுக்கு எதிராக நடந்து கொள்வது மிகவும் வேதனையானது” என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!