வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (16/04/2018)

கடைசி தொடர்பு:07:16 (16/04/2018)

மேகமலைச் சாலையில் தொடரும் விபத்துகள்.! சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

மேகமலைச் சாலையில் தொடரும் விபத்துகள்.! சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

மேகமலை விபத்து

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. ரம்மிய தோற்றத்துடன் காணப்படும் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் அழகிய மேகமலையை ரசிக்கச்  சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் விபத்துகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று முன்தினம் (14.4.2018) விருதுநகரில் இருந்து மேகமலைக்குச் சுற்றுலா வந்தவர்களின் வேன் விபத்தில் சிக்கியது. 16 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட வேனில் வந்த 26 பேரில் 8 பேர் படுகாயமடைந்தனர். குழந்தைகள் யாருக்கும் காயம் இல்லை. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று (15.4.2018) கம்பம் பகுதியைச் சேர்ந்த இருவர் வந்த இருசக்கர வாகனமும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இதில் அனிதாஸ் (32) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அபிமன்யூ (18) என்ற கல்லூரி மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

மேகமலை விபத்து

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நடைபெற்று வரும் சாலைப்பணியின் காரணமாகச் சாலையோரம் எந்த அறிவிப்புப் பலகையும் இருப்பதில்லை. எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், ஆபத்தான வளைவுகள் எங்கே உள்ளன போன்ற எந்த எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லாததே தொடர் விபத்துக்குக் காரணமாக குற்றம்சாட்டப்படுகிறது. கோடை விடுமுறை துவங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர் விபத்துகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோர அறிவிப்புப் பலகைகளை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.