வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (16/04/2018)

கடைசி தொடர்பு:15:39 (25/06/2018)

திராவிடர் கழகம்  பொதுக்கூட்டத்தில்  நாற்காலி உடைப்பு கல்வீச்சு, பதற்றம், பரபரப்பு!

 திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதால் காவல்துறை குவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.


திராவிடர் கழகம் மறியல்

           
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது கட்டுமாவடி என்ற ஊர். இங்கு நேற்று இரவு (15.4.2018)  திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. காலை முதலே பகுத்தறிவு சம்பந்தப்பட்ட பாடல்களும் தலைவர்களின் பேச்சும் ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கான நேரம் நெருங்க நெருங்க, கூட்டமும் சேர்ந்தது. இந்தக்கூட்டத்துக்குப் புதுக்கோட்டை மாவட்ட மண்டலத்தலைவர் இராவணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திரண்டு வந்திருந்தனர்.
அவர்களில் முக்கிய நபர்களும் உறுப்பினர்களும் பேசும்போது, கடவுள்களை விமர்சித்தும், அதன் மூலம் அரசியல் நடத்தும், மத அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் தாக்கியும் பேசினார்கள். இதில் ஆத்திரமடைந்த கட்டுமாவடி, கணேசபுரம், செம்பியன் மாஹாதேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த  இந்து முன்னணி. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்கள் பொதுக்கூட்ட வளாகத்தில் ஒன்று கூடி இந்து மதத்தை இழிவாகப் பேசியவர்களுக்கு எதிராகக் கோஷமிட்டனர். மேலும்,  அங்குப்  போடப்பட்டிருந்த நாற்காலிகளைத் தூக்கிப்போட்டு உடைத்ததாகவும் கூட்டத்திலும் மேடையில் பேசிக்கொண்டிருந்தவர்களை நோக்கியும் கற்களை வீசியதாகக்  கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. உடனடியாக காவலர்களும் குவிக்கப்பட்டனர். திராவிடர் கழகத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காமராஜ், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோரிடம், ``கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களைக்  கைதுசெய்ய வேண்டும். உடைக்கப்பட்ட பொருள்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்கள்.

பிரச்னை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், இந்த திடீர் கலவரத்தால் கட்டுமாவடி கடைவீதியில் பதற்றம் ஏற்பட்டு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் கடைவீதியில் பாதுகாப்புக்காக போலீஸ் போடப்பட்டுள்ளது.