சட்டசபையில் அவசர தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

தமிழக அரசு சட்டசபையைக் கூட்டி அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றி, ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கான முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும் என தூத்துக்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்  பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.குமரெட்டியார்புரத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம், கடந்த 64  நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர் பகுதிகளுக்கு விவசாயிகள் சங்கத்தின் பி.ஆர் பாண்டியன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்ற போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மக்களின் போராட்ட உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், போராடி வரும் போராளிகளை அச்சுறுத்தக்கூடாது. பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. காவலர்கள் மூலம், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்க முயற்சிக்கும் தமிழக அரசு, போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து உரிய தீர்வுகாண வேண்டும்.  தமிழக அரசு சட்டசபையைக் கூட்டி அவசர தீர்மானத்தைக் கொண்டுவந்து இந்த ஆலையை அகற்றுவதற்கான முயற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். 

தமிழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் ஆட்சி இருக்கிறது என்பதை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனே ஒத்துக்கொள்கிறார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு, மாநில அரசுக்குப் போதிய அறிவுரைகளை வழங்கி ஆலையை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஶ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவதற்கும், ஆற்றைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகள், ஸ்டெர்லைட் ஆலைக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்துக்கு காவிரி நீர் கொடுத்தால் ஹைட்ரோ கார்பன் எரிவாயு, மீத்தேன் வாயு, இயற்கை எரிவாயு எடுப்பதற்கு நிலத்தை விவசாயிகள் தரமாட்டார்கள். ஆகையால் காவிரிநீர் தராமல் தடுத்துவிட்டால் நிலத்தை விற்றுவிட்டு விவசாயிகள் வெளியேறி விடுவார்கள் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்படுவதால் தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க தவறுகிறார் பிரதமர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!