வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (16/04/2018)

கடைசி தொடர்பு:09:26 (16/04/2018)

“ஃபீல்டுக்குப் போனதும் லாடம் கட்டின குதிரையாகிடுவேன்!" சவால்களைத் தாண்டி குளங்களைச் சீரமைக்கும் மருத்துவர் சங்கரி

“ஃபீல்டுக்குப் போனதும் லாடம் கட்டின குதிரையாகிடுவேன்!

குளத்தை தூர்வாரும் சங்கரி

ங்கரிக்குச் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம். தினமும் திருநெல்வேலியிலிருந்து சிவந்திபுரத்தில் உள்ள அந்தக் குளத்தைக் கடந்துதான் ஊருக்குச் செல்ல வேண்டும். கடந்த ஐந்து  வருடங்களுக்கு முன்புகூட அந்தக் குளத்தை நம்பி சுற்றுவட்டாரத்தில் அமோகமான விளைச்சல் இருந்திருக்கிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக குளம் குறுகிக் குப்பை மேடாகிவிட்டது. தன்னுடைய கல்லூரிக் காலங்களில் நீர்நிலையாகக் காட்சி அளித்த குளத்தின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போதெல்லாம் சங்கரிக்கு வேதனை, மனதைத் துளைத்துள்ளது. எப்படியாவது அந்தக் குளத்தை மீட்டு புனரமைக்க முடிவுசெய்தார். அரசும் கைகொடுக்க குப்பை மேடான குளம் சீரமைக்கப்பட்டது. கோடைக் காலம் துவங்கிவிட்ட இந்தச் சூழலிலும் அந்தக் குளம் நீர் நிரம்பி வழிகிறது. அந்தப் பூரிப்போடு சங்கரியிடம் பேசினோம். 

 

பள்ளி மாணவிகளோடு சங்கரி“எங்க ஏரியாவில் உள்ள மிகப்பெரிய குளங்களில், அலங்காரியம்மன் குளமும் ஒண்ணு. ரோட்டோரமாவே இருக்கும். சின்ன வயசிலிருந்தே அந்தக் குளத்தைப் பார்த்திருக்கேன். இப்பவும் மழைக் காலங்களில் கரை முழுக்க தண்ணீர் தேங்கி நிற்கும். ஆனால், கழிவுநீரும் நல்ல தண்ணியும் சேர்ந்து குளத்தையே மாசுபடுத்திடுச்சு. இந்தக் குளம் மூலிகைத்தன்மை நிறைந்த குளம்னு சொல்றாங்க. ரெண்டு தலைமுறைக்கு முன்னே இருந்தவங்க, பாபநாசம் அணையின் நீர்மட்டத்தை இந்தக் குளத்தின் தண்ணீரை வைத்தே கணிச்சிருக்காங்க.

நான் இயற்கை மருத்துவம் படிச்சிருக்கேன். கன்னியாகுமரியில் படிப்பு. பெங்களூரிலும் டெல்லியிலும் துறைச் சார்ந்த ஆராய்ச்சி படிப்புகளை முடிச்சேன். அந்தச் சமயத்தில்தான் சூழலியல் சார்ந்து அதிகமா யோசிக்க ஆரம்பிச்சேன். டெல்லியில் ஆராய்ச்சிப் படிப்பை முடிச்சுட்டு சொந்த ஊர் வந்ததும், முதல்ல என் கண்ணில் பட்டது அலங்காரியம்மன் குளம். அந்தக் குளத்தை சுற்றி 10 மீட்டர் தொலைவிலேயே வீடுகள் வந்துடுச்சு. ஊரில் இருக்கும் குப்பைகளும் கழிவுநீரும் குளத்தில் கலக்க ஆரம்பிச்சிடுச்சு. நான் பார்த்துப் பார்த்து ரசிச்ச குளம், பாழாகிக் கிடக்கிறதை ஜீரணிக்க முடியலை. குளத்தைத் தூர் வாரணும்னு நினைச்சேன். 2016-ம் வருஷம், திருநெல்வேலி மாவட்ட கலெக்டரா இருந்த கருணாகரன் சார்கிட்ட பர்மிஷன் கேட்டேன். `நல்ல விஷயம். தாராளமா பண்ணுங்க. அரசும் உங்களுக்கு உதவும்'னு சொன்னார். நம்பிக்கையோடு களத்தில் இறங்கினேன்” என்கிறார் சங்கரி. 

 

குளத்தைத் தூர்வார என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டார்? 

``குளத்தைச் சீரமைக்க முடிவுப் பண்ணினதும், எப்படிச் செயல்படுத்தப்போறோம்னு ரொம்பவே குழப்பமா இருந்துச்சு. வெளியூர்களில் படிச்சதால், சொந்த ஊரில் எனக்குன்னு பெரிய சர்க்கிள் இல்லை. ஆனாலும், சின்னச் சின்ன முயற்சிகளை எடுக்க ஆரம்பிச்சேன். என் சொந்த செலவில் 120 லிட்டர் கொள்ளளவு குப்பைத்தொட்டிகளை குளத்தைச் சுற்றிலும் வெச்சேன். குளத்து நீரைப் பாதுகாப்பது தொடர்பாக ஊர்மக்களிடம் விழிப்பு உணர்வு கொடுத்தேன். 10 வருஷமா தூர்வாரப்படாத இந்தக் குளத்தை சுத்தம் பண்ணினால், 80 சதவிகிதம் நாமே மீட்டுருவாக்கம் பண்ணிடலாம்னு ஊர்மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தேன். ஆனாலும், பலவித விமர்சனங்கள் வந்துச்சு. `டாக்டருக்குப் படிக்கப்போனவ இப்போ குளத்தின் குப்பையை அள்ளிட்டிருக்கா'னு கிண்டலா பேசினாங்க. வேலையைச் செய்யவிடாம சிலர் இடைஞ்சல் கொடுத்தாங்க. நான் அதுபற்றி கவலைப்படலை. லாடம் கட்டின குதிரையாட்டம் என் வேலையில் தெளிவா இருந்தேன். பள்ளி மாணவர்களை துணைக்கு அழைச்சேன். அவர்களிடம் ஒரு ஃபயர் இருந்துச்சு. அதைச் சரியாகப் பயன்படுத்தினேன். அதனால்தான், கொஞ்ச நாளிலேயே தூர்வாரி முடிச்சேன். இப்போ கோடை ஆரம்பிச்சிடுச்சு. அந்தக் குளத்தில் மூணு போகத்துக்கான தண்ணீர் நிறைஞ்சு இருக்கு. ஊர்மக்களும் கொண்டாட்டத்தில் இருக்காங்க” எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் சங்கரி.

“எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து பாஸிட்டிவ்வா பண்ணிட்டிருந்தா, அது ஸ்ட்ராங்கா மாறும்னு இந்த விஷயத்தில் கத்துக்கிட்டேன். இப்போ சுற்றுவட்டாரங்களில் இருக்கும் தூர்வாரப்படாத குளங்களை கணக்கெடுத்துட்டிருக்கேன். சீக்கிரமே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல குளங்களை புதுப்பொலிவு பெறச் செய்யணும்'' என நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் சங்கரி.


டிரெண்டிங் @ விகடன்