``எனக்குச் சாதகமானவர் இவர் மட்டும்தான்” புதுச்சேரி அமைச்சரைப் பாராட்டிய கிரண்பேடி

``எனக்குச் சாதகமானவர் இவர் மட்டும்தான்” என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர் ஒருவரை பாராட்டியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரண்பேடி

கடந்த 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதே வேகத்தில் கிரண்பேடியை புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநராக அறிவித்தது மத்திய பா.ஜ.க அரசு. அதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவியேற்பதற்குள் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகப் பதவியேற்றார். அன்றைய தினத்தில் இருந்து, அவருக்கும், நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார் கிரண்பேடி. தற்போது சுமுகமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் போக்கு நீருபூத்த நெருப்பாகவே தொடர்ந்து வருகிறது.

கமலக்கண்ணன்

இந்நிலையில், விழா ஒன்றில் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ``புதுச்சேரி அமைச்சரவையில் எனக்குச் சாதகமான ஒரே அமைச்சர், கல்வி அமைச்சரான கமலக்கண்ணன்தான். அவருக்கு எப்போதும் பொறுப்புணர்வு அதிகம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி லுங்கி அணிந்துகொண்டு சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய விஷயம். மேலும், மக்களால் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இப்படியான தூய்மைப் பணியில் ஈடுபடுவது நாட்டிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எப்போதும் அவருடைய இதயத்தில் இருக்கிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!