வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (16/04/2018)

கடைசி தொடர்பு:09:37 (16/04/2018)

`அதிகாரத்தில் இருப்பவர்களே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்!’ - வருந்தும் கிரண்பேடி

``அதிகாரத்தில் இருப்பவர்களே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்” என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சுமத்தியுள்ளார்.

கிரண்பேடி

`தற்காலப் பெண் ஆய்வுகளில் பல்துறைச் சார்ந்த ஆராய்ச்சி' என்ற தலைப்பிலான கருத்தரங்க மாநாடு புதுச்சேரி தாகூர் அரசுக் கலைக்கல்லூரியில் தொடங்கியது. அதில் கலந்துகொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, “இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.

குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. இதனால் சட்டம் வலிமையானதாக இல்லை என்பது பொருள் அல்ல. சட்டம் வலிமையானதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களும் பண பலம் உள்ளவர்களும்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எளிதாக ஈடுபடுகிறார்கள். அதை மாற்ற வேண்டும் என்றால் கல்வியாளர்கள், சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டும் காவல்துறையினர், ஆராய்ச்சியாளர்கள் மூவரும் இணைந்து, ஏன் இப்படியான பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதை ஆய்வுசெய்து தீர்வு காண வேண்டும். பெண்கள் தன்னம்பிக்கையை அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் ஆண்களும் தங்கள் பலத்தைப் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளை ஈவ் டீசிங் செய்வதை சில மாணவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவ்வாறு நடைபெறாமல் இருக்கப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பொறுப்புணர்வைக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க