Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``அவரைப் பற்றி இப்போது புரிந்துகொண்டார்கள்!" வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

``வீரப்பன் இருந்திருந்தால் காவிரி நதிநீர் பிரச்னை இந்தளவுக்கு வந்திருக்காது. தமிழகம், கர்நாடகாவுக்கு இடையே காவிரி பிரச்னை உருவாகியபோதெல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்தவர் வீரப்பன்'' என்று தன் கணவரைப் பற்றி பேசத்தொடங்குகிறார் 'மண் காப்பு வீர தமிழர் பேரமைப்பு' ஆரம்பித்திருக்கும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியில் தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்த அவரைச் சந்தித்தோம்.... அப்போது நம்மிடம் பேசிய முத்துலட்சுமி, ''என் கணவர் வீரப்பன் இறந்த பிறகு நான் மலைவாழ் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி அவர்களின் வளர்ச்சிக்காகப் போராடி வந்தேன். 2006-ம் ஆண்டு பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன். அதனால் என் மீது காழ்ப்பு உணர்ச்சி காரணமாக பாலாறு குண்டு வெடிப்பு, ஹரிகிருஷ்ணன் எஸ்.பி. கொலை வழக்கு, ராமாபுரம் காவல் நிலையத் தகர்ப்பு, டி.எஃப்.ஓ. சீனிவாசன் தலை துண்டிப்பு, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு என  நிலுவையில் இருந்த 5 வழக்குகளில் கைது செய்து  மைசூர் மத்திய சிறையில் அடைத்தார்கள்.

சிறைக்குள் 4 ஆண்டுகள் இருந்து 5 வழக்குகளிலும் விடுதலையாகி 2011-ம் ஆண்டு வெளியே வந்தேன். குடும்பத்தில் சில பிரச்னைகள் நிலவியதால், குடும்பத்தைக் கவனித்தேன். என்னுடைய இரண்டு பெண்களும் அவரவர் குடும்பத்தில் நன்றாக இருக்கிறார்கள். தற்போது 'மண் காப்பு வீர தமிழர் பேரமைப்பை'த் தொடங்கி தமிழர்களுக்காகவும் தமிழகப் பழங்குடியின மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

என் கணவர் இறந்து 14 வருடங்கள் ஆகியும் இன்னும் அவருடைய வழக்கில் நிறைய பேர் தேடப்படும் குற்றவாளிகளாகவும், 25 வருடங்களுக்கு மேல் சிறைக் கைதிகளாகவும் இருந்து வருகிறார்கள். என் கணவர் சம்பந்தப்பட்ட  வழக்குகள் முழுவதையும் நீக்கி அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதாசிவம் கமிஷன்படி முழுமையான நிவாரணத் தொகை வழங்க வேண்டும்'' என்று தன்னுடைய ஃப்ளாஷ்பேக் தகவல்களைக் கூறி விட்டுத் தொடர்ந்தார்...

``என் கணவரோடு நான்  3 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் எங்கள் கால்கள் படாத இடமே இல்லை. வீரப்பன் ஒரு குற்றவாளியாக வாழவில்லை. ஒரு போராளியாக வாழ்ந்தார். என் கணவரைத் தேடி பல பஞ்சாயத்துகள் வரும். நீதிமன்றமே தீர்க்க முடியாத பிரச்னைகளை என் கணவர் தீர்த்து வைப்பார். அதில் கிடைக்கும் பணத்தில் பசியால் வாடிய ஆயிரமாயிரம் ஆதிவாசிப் பழங்குடியின மக்களுக்கு வயிறாற உணவளிப்பார்.

காவல்துறையினரைப் பிடித்தால் அவர் சொல்லும் முதல் வார்த்தை, `நாங்கெல்லாம் படிக்காத ஜனங்க. எங்களுக்குச் சட்டம் பற்றி எதுவும் தெரியாது. எங்க மனசாட்சிக்கு எது தர்மமுன்னு படுதோ அதைச் செய்வோம். ஆனால், நீங்க படிச்சவங்க... சட்டத்தை அறிஞ்சவங்க... பாமர மக்களிடம் எப்படி நடந்துக்கணுமுன்னு சொல்லிதானே அனுப்புறாங்க. மக்கள் தப்பு பண்ணினால் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படையுங்க. நீதிமன்றம் தூக்குத் தண்டனையே கொடுத்தாலும் ஏத்துக்கிறோம். நீங்க சட்டத்தை மீறும்போது நாங்களும் சட்டத்தை மீறுவதில் என்ன தப்பு இருக்கு...' என்று கூறுவார். வீரப்பன், நீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருந்தார். ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசே மதிக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

1991-ல் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அடுத்து கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. கர்நாடக தமிழர்களின் குடும்பங்கள் சூரையாடப்பட்டன. பலர் கொல்லப்பட்டார்கள். பல லட்சம் பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தார்கள். கொல்லேகால், சாம்ராஜ் நகர், நல்லூர் பகுதிகளில் தமிழகக் கிராமங்களைத் தீ வைத்து எரித்தார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையானது. அப்பகுதிக்கு வீரப்பன் வருகிறார் என்று தெரிந்த பிறகே கன்னட கலவரக்காரர்கள் பின்வாங்கினார்கள்.

நல்லூரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள்  என 200 குடும்பத்தினர் என் கணவரோடே காட்டுக்குள் வந்தார்கள். சிங்கம் தன் குட்டிகளைக் காப்பதைப் போல அவர்களைப் பல மாதம் காப்பாற்றி வெளியே அனுப்பினார். எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல்,  'செத்தாலும் உங்களோடே சாகின்றோம்' என்று 80 குடும்பத்தினர் எங்களோடே தங்கி இருந்தார்கள்.  அவர்களில் பலரை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

முத்துலட்சுமி

அதன் பிறகு தமிழக மக்களின் நலனுக்காகவே குரல் கொடுக்கத் தொடங்கினார். கர்நாடகா, காவிரியில் தண்ணீர் தர மறுக்கும்போது கர்நாடகாவில் உள்ள அணைகளை  குண்டு வைத்து தகர்ப்பேன் என்றும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரைக் கடத்தி காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால் கன்னடர்கள்  தமிழர்களைக் கண்டு பயந்தார்கள். ஒகேனக்கல் பக்கம் வர மாட்டார்கள். ஆனால், தற்போது என் கணவர் இல்லாததால், ஒகேனக்கல் எங்களுடையது என்றும், மேகேதாட் பகுதியில் அணை கட்டவும் துணிந்திருக்கிறார்கள். தமிழகக் காவல் துறையினர் என் கணவரைத் திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டார்கள். அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், காவிரி நதி நீர் பிரச்னை இவ்வளவு பெரிதாகி இருக்காது. தமிழர்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்திருப்பார்.

 காவிரி பிரச்னை என்பது ஆரம்பக் காலத்திலேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். காவிரிக்காக தமிழக அரசியல் கட்சியினர் போராடி வருவது காலம் கடந்த போராட்டமாகவே கருதுகிறேன். தமிழக அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. சாதி, மதம் வேற்றுமையோடும், சுயநல சிந்தனையோடும்  செயல்படுகிறார்கள். அதனாலேயே தமிழகம் வீழ்ந்து போகிறது. நம் மண்ணையும், தண்ணீரையும் காக்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அதனால் அரசியல்வாதிகள்  சமுதாயத்துக்குப் போராட வேண்டிய நிலை மாறி வெகுஜன மக்களும் தானாகவே முன் வந்து மண்ணுக்காகவும், தண்ணீருக்காகவும்,  சமுதாயத்துக்காகவும் போராட வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

ஜெயலலிதாவைக்கூட நீதிமன்றம் குற்றவாளி என்றது. ஆனால், என் கணவரை எந்த நீதிமன்றமும் குற்றவாளி என்று கூறவில்லை. என் மீது போடப்பட்ட வழக்குகள்தான் என் கணவர் மீதும் போடப்பட்டது. நான் விடுதலை ஆனதைப்போல அவர் இருந்திருந்தால், அவரும் விடுதலையாகி இருப்பார். இருந்தாலும் என் கணவரை குற்றவாளியாகவே பார்க்கும் கண்ணோட்டம் இருந்து வந்தது. அது தற்போது மாறி இருக்கிறது. இளைஞர்கள் என் கணவர்  தமிழனத்தின் பாதுகாவலராகவும், எல்லை தெய்வமாகவும்  வாழ்ந்திருக்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்கள் 'மண் காக்கும் வீர தமிழர் பேரமைப்பில்' இணைய வேண்டும். காவிரி பிரச்னையில், அரசியல் செய்யாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement