வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (16/04/2018)

கடைசி தொடர்பு:12:12 (16/04/2018)

செயின் திருடர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? வைரலாகும் புகைப்படங்கள்

`செயின் பறிப்புக் கொள்ளையரிடமிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?' என்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


செயின் திருடர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி? வைரலாகும் புகைப்படங்கள்

சாலைகளில் தனியாக நடந்து செல்லும் டூவீலரில் விரைந்துச்செல்லும் தள்ளுவண்டியில் காய்கறி வாங்கும் பெண்களைக் குறிவைத்து பைக்கில் வரும் செயின்பறிப்புத் திருடர்கள் அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைப் பறித்துச்செல்லும் கொடுமை  தமிழகத்தில் சில மாதங்களாகவே அதிகரித்திருக்கிறது. பெண்களை தரதரவென இழுத்துச் செல்வது, பலம் கொண்ட செயினைப் பிடித்து இழுப்பதால் கழுத்து அறுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பல செயின் திருடர்களால் பெண்கள் கழுத்தில் உள்ள செயினை அறுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெண்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப் ஒன்றை பின் செய்துகொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் கற்பகவல்லி கூறுகையில், ``இது மிகவும் எளிய முறை. பாதுகாப்பானதும்கூட. பெரிய சதுர வடிவிலான இந்த ஆடையை முக்கோண வடிவில் மடித்து, முதுகுப்புறமாக அதை வைத்து, இரண்டு நுனிகளையும் இடது, வலமாக கழுத்தை மூடிய வண்ணமாக முன்புறம் கொண்டுவந்து, பின் செய்துவிட்டால், பெண்களின் செயினும் பத்திரமாகும். விலைமதிப்பில்லாத உயிரும் பாதுகாக்கப்படும்" என்றார்.

ஆசிரியை கற்பகவல்லி

மேலும் அவர் மற்றொரு யோசனையையும் முன்வைக்கிறார். ``இதில் சிறு மாற்றத்தை வேலைக்குச் செல்லும்  பெண்கள் செய்துகொள்வது காலத்தின் அவசியமாகிறது. நாம் அன்றாடம் அணிந்துகொள்ளும் உடைகளுக்கு ஏற்றவாறு மேட்சிங்காக இந்த ஸ்கார்ப்பை அணிந்தால், செயின் திருடர்களுக்கு வித்தியாசம் தெரியாது. நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். மாறாக, மஞ்சள் நிற உடைக்கு சிகப்பு, கறுப்புக் கலரில் ஸ்கார்ப் அணிந்துகொண்டால், நம்மிடம் செயின் இருக்கிறது என்பதை திருடர்களுக்கு நாமே அடையாளப்படுத்திவிடுவதுபோல் இருக்கும். செலவைப் பார்க்காமல் எல்லாவிதத்திலும்  நிறத்திலும் இதனை வாங்கிக் கொண்டால் நமக்கு பாதுகாப்பு" என்றார்.