வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (16/04/2018)

கடைசி தொடர்பு:15:37 (27/06/2018)

பரிசுகளை வென்ற ஜல்லிக்கட்டு காளைக்கு நடந்த சோகம்! உரிமையாளரைத் தேடும் வாட்ஸ்அப்

புதுக்கோட்டை நகரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மற்றொரு காளை நேற்று நள்ளிரவு சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தது. இந்தத் தொடர் சம்பவங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜல்லிக்கட்டு உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு காளை

புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி மலையகருப்பர் கோயில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று (15.4.2018) நடந்தது. திருச்சி செல்லும் சாலையில் ஐ.டி.ஐ அருகே உள்ள அய்யனார் திடலில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெயர் பெற்ற பல ஜல்லிக்கட்டுக் காளைகள் பங்குபெற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். ஐந்து தமிழக அமைச்சர்களும் இந்தப் போட்டியைக் காண்பதற்காக வந்திருந்தனர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற காளைகளுக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் மோட்டார் பைக்குகள், சைக்கிள்கள், எல்.இ.டி டிவி-க்கள் தங்கக் காசுகள், விமான டிக்கெட்டுகள், வெள்ளிக் காசுகள், பீரோ, மிக்சி, கிரைண்டர்கள் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் அன்னவாசல் அருகிலுள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் காளையும் பங்கேற்றது. அவிழ்த்துவிடப்பட்ட இந்தக் காளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்ற இடத்துக்கும் சற்று தூரத்தில் கருவேப்பிள்ளையான் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து புதுக்கோட்டை வழியாக விரைந்து வந்துகொண்டிருந்த ராமேஸ்வரம் செல்லும் ரயில் எதிர்பாராமல் அந்தக் காளையின்மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே காளை பலியானது. இது குறித்த செய்தியையும் நாம் வெளியிட்டிருந்தோம்.


இந்நிலையில் இதே போன்ற மற்றொரு துயரம் நடந்துள்ளது. அதே மலையப்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரிமையாளரின் கையில் சிக்காமல் காளை ஒன்று சாலை வழியாகச் சென்றிருக்கிறது. நேற்று நள்ளிரவு முத்துடையான்பட்டி நக்கீரர் வயல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அந்தக்காளை உயிரிழந்தது. இன்று காலையில் இறந்துகிடக்கும் காளையைக் கண்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பதறிவிட்டார்கள். இறந்த அந்தக் காளையைப் படங்கள் எடுத்து, யாருடையது, எந்த ஊரைச் சேர்ந்தது என்று வாட்ஸ்அப் மூலம் விசாரித்து வருகின்றனர்.

தங்க கண்ணன்இதுகுறித்து ஐந்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் உரிமையாளரான தங்க கண்ணன் என்பவர், "ஜல்லிக்கட்டு காளைகள் இப்படி அகால மரணங்கள் அடைவது மிகவும் அபசகுனமானது. ஒவ்வொரு காளையும் இரண்டு லட்சம் முதல் நான்கு லட்சம் வரை மதிப்புள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற ஜல்லிக்கட்டு காளைகள் மூலமாகத்தான் இனவிருத்தி நடைபெறுகிறது. அதன்மூலம் வீரியம் மிக்க, பாரம்பர்ய முறையிலான நாட்டுமாடுகளின் எண்ணிக்கையை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. போட்டிகளுக்கு காளைகளை ஓட்டி வரும் உரிமையாளர்கள், பரிசு பொருள்களை வாங்குவதில் கவனத்தைச் செலுத்துவதைத் தவிர்த்து, தங்களுடைய காளைகளைத் துரத்திச் சென்று உடனடியாகப் பிடித்து ஊருக்குக் கொண்டுச் செல்வதில் கவனமுடன் இருக்க வேண்டும். இதைச் செய்ய தவறும் பட்சத்தில் காளைகள் இப்படி ரயிலிலும் வாகனங்களிலும் அடிபட்டு இறக்கின்றன" என்றார்.

ஒரே ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளை வென்ற பிடிபடாத இரண்டு கம்பீரமான காளைகள் இறந்த சம்பவம், அப்பகுதி ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.