சரிவிலிருந்து மீள்கிறது ஜி.எஸ்.டி வரி வசூல்!
மார்ச் மாதத்துக்கான வரிக் கணக்கு தாக்கல் முடிவில், ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 95,000 கோடி ரூபாயைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 20-ம் தேதியுடன் மார்ச் மாதத்துக்கான வரிக் கணக்கு தாக்கல் முடிவடையும் நிலையில், ஜி.எஸ்.டி வரி ரூ.93,000 - 95,000 கோடி வரை வசூலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த ஐந்து மாதங்களில் வசூலான சராசரி ஜி.எஸ்.டி தொகையான ரூ.87,000 கோடியைவிட அதிகமாக இருக்கும்.
கடந்த 2017 ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலான நிலையில், முதல் மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி வசூல் தலா 90,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலான நிலையில், அதன்பின்னர் அது குறையத் தொடங்கியது. டிசம்பர் 2017-ல் இது 84,000 கோடி ரூபாயாகக் குறைந்தது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் காணப்பட்ட சில குறைபாடுகள் தற்போது சரி செய்யப்பட்டு, ஸ்திரமான நிலை உருவாகி உள்ளது. இதனால் இந்த வரி விதிப்பு முறையில் காணப்பட்ட சில குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.
கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அளவீட்டு முறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 178 பொருள்களுக்கான வரி விதிப்பு 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் ஜி.எஸ்.டி வரி வசூலில் முன்னேற்றம் காணப்பட்டது.