வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (16/04/2018)

கடைசி தொடர்பு:13:40 (16/04/2018)

நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் விலைமதிப்புமிக்க விருதுகள், கேடயங்கள் கொள்ளை

 நடிகர் பார்த்திபன்

சென்னையில் உள்ள நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் லாக்கர் உடைக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட விருதுகள், கேடயங்கள் ஆகியவை கொள்ளைபோயுள்ளன. 

சென்னை திருவான்மியூர், காமராஜர் நகர், 11வது கிழக்கு தெருவில் நடிகர் பார்த்திபனின் அலுவலகம் உள்ளது. தற்போது அவர் மரக்கானத்தில் குடியிருந்து வருகிறார். சென்னைக்கு வந்தால் திருவான்மியூரில் அவர் தங்குவது உண்டு. இந்த அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்தவர்கள் நடிகர் பார்த்திபனுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து நடிகர் பார்த்திபனின் மேலாளர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட விருதுகள், கேடயங்கள் கொள்ளை போயுள்ளன. கொள்ளையர்கள் முன்பக்கம் வழியாகத்தான் புகுந்துள்ளனர். கொள்ளை குறித்து விசாரித்து வருகிறோம். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். கொள்ளைபோன பொருள்களின் மதிப்பு தெரியவில்லை" என்றனர்.

இதற்கிடையில் இந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நடிகர் பார்த்திபன் தரப்பில் போலீஸாரிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளை சம்பவத்தைப் போலீஸார் மூடிமறைத்து வருகின்றனர். இருப்பினும் தகவல் மீடியாக்களில் தெரிந்துவிட்டது.