வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (16/04/2018)

கடைசி தொடர்பு:15:56 (16/04/2018)

`அழகு... நீ நடந்தால் நடையழகு!’ - ராகுலுக்காகப் பாட்டுப் பாடிய நக்மா

`ராகுல்தான் எங்கள் அனைவருக்கும் பாட்ஷா’ என்று புதுச்சேரியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி நடிகை நக்மா தெரிவித்திருக்கிறார்.

நக்மா

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவியான நடிகை நக்மா, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக 5 நாள் சுற்றுப் பயணமாக புதுச்சேரி வந்திருந்தார். கடைசி நாளான நேற்று, திருக்கனூரை அடுத்துள்ள சோரப்பட்டு என்ற கிராமத்தில் நடந்த பெண்கள் விழிப்புஉணர்வு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தற்போது இருக்கும் மத்திய பா.ஜ.க அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி பிரதமரானால்தான், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல விவகாரங்களுக்குத் தீர்வு கிடைக்கும். அதனால், அவர் பிரதமராவதற்கு நாம் பாடுபட வேண்டும். இங்கிருக்கும் பெண்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் சரிவர கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்கள், தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.


அதேபோல, புதுச்சேரி காங்கிரஸ் அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்துவருகிறார். அதனால், உடனே அவரை புதுச்சேரியை விட்டு திரும்ப அனுப்ப வேண்டும். மத்திய பா.ஜ.க அரசு பெண்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்திருக்கிறது. இந்த அனைத்துப் பிரச்னைகளும் 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமரானதும் சரியாகிவிடும்” என்றார். அப்போது, அந்த விழாவில் இருந்த பொதுமக்கள் ஒரு பாட்டுப் பாடும்படி நக்மாவிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு, “எனக்குத் தமிழ் தெரியாது. என்ன பாட்டு வேணும்னு சொல்லுங்க ட்ரை பண்றேன்” என்றார். அப்போது மக்கள் கேட்டதால்,

 

‘தங்க மகன் இன்று சிங்க நடைபோட்டு அருகில் அருகில் வந்தான். ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்’

என்ற பாடலையும்

`அன்புள்ள மன்னவனே... ஆசைக் காதலனே...

இதயம் புரியாதா..? என் முகவரி தெரியாதா..?’  என்ற பாடலையும்

`அழகு... அழகு.. நீ நடந்தால் நடையழகு...

நீ சிரித்தால் சிரிப்பழகு...

நீ பேசும் தமிழ் அழகு... நீ ஒருவன் தானழகு...’ என்ற பாடலையும்

`ஸ்டையிலு ஸ்டைலுதான் நீ சூப்பர் ஸ்டையிலுதான்

இந்த ஸ்டையிலுக்கேத்த மயிலு நானுதான்...’ 

என்ற பாடலையும் கொஞ்சம் கொஞ்சம் பாடிக் காட்டினார். கூட்டத்திலிருந்து ஒருவர், ‘சூப்பர் ஸ்டார்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என்று குரலெழுப்பினர். உடனே அதிர்ந்துபோன நடிகை நக்மா, “நோ... நோ... இந்தப் பாடல்களை நான் ரஜினிக்காகப் பாடவில்லை. ராகுல் காந்திக்காகப் பாடினேன். எங்கள் தலைவர் ராகுல்காந்திதான் எங்களுக்கு பாட்ஷா” என்று சொன்னவர், “அடுத்த முறை பாடலை நன்றாகப் பாடக் கற்றுக்கொண்டு பாடிக்காட்டுகிறேன்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க