``போபர்ஸ் ஊழலில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இடமில்லையா என்ன?" - திருமுருகன் காந்தி கேள்வி | "People should read Periyar and Ambedkar" says thirumurugan gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (16/04/2018)

கடைசி தொடர்பு:15:35 (16/04/2018)

``போபர்ஸ் ஊழலில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இடமில்லையா என்ன?" - திருமுருகன் காந்தி கேள்வி

``போபர்ஸ் ஊழலில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இடமில்லையா என்ன?

அண்ணல் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு, மே 17 இயக்கத்தின் சார்பில் கடந்த 14-ம் தேதி சென்னை திருவொற்றியூரில், நீட் தேர்வு, வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மே 17 இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தைச் சார்ந்த அருள்முருகன், லெனாகுமார், பிரவீன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாகப் பொதுக்கூட்டத்தில், கல்வி தமிழ்த் தேசிய உரிமை; சாதி ஒழிப்பே தமிழ்த் தேசியம்; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று; அனிதாவின் கனவை நிறைவேற்று உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதில் திருமுருகன் காந்தி பேசியதாவது, ``இந்தியாவினுடைய அரசியல் சாசனத்தை இந்துத்துவ நோக்கத்துக்காகத் திணிப்பதிலும், உயர் சாதியின் ஆதிக்கப் போக்குகளை நிலைநிறுத்துவதிலும் பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் கடுமையாகப் போராடி மீட்டுக்கொடுத்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது.  உயர் சாதியினர் எதிர்ப்பு என்பது ஏன் தேவை, மனுதர்மத்தை இந்த ஆட்சியாளர்களோடு தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டதன் காரணமாகச் சமூகநீதியை முற்றிலும் அழித்து, உயர் சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை 2,000 ஆண்டுகளாக நிலைநிறுத்தி வைத்துள்ளனர். 2,000  ஆண்டுகளாகச் சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் நாம் சுரண்டப்பட்டிருக்கிறோம். நம்முடைய நாகரிகம் அழிக்கப்பட்டு அறிவு திருடப்பட்டிருக்கிறது. 2,000 ஆண்டுகளாக நடந்த இந்த மனுதர்ம ஆட்சியின் கொடுமைகள் நீட்சி இன்னும் தொடர்கிறது. 

திருமுருகன் காந்தி

உயர் சாதியினரின் சூழ்ச்சியைத் தன்னால் முடிந்தளவு போராடி வென்றெடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். அம்பேத்கரை, ஒருதரப்பான மக்களுக்கான தலைவராக மட்டுமே பார்ப்பது அவருக்குச் செய்யக்கூடிய துரோகம். அவர் சமதர்மத்தை உயர்த்திப் பிடித்தவர்; எல்லா உயிர்களையும் நேசித்தவர்; ஒட்டுமொத்த உலக மக்களின் விடுதலைக்காக யோசித்தவர்; அவர், அரசியல் சாசன நிர்ணய சபைக்குள் நின்று மனுதர்ம சூழ்ச்சியையெல்லாம் தன்னால் இயன்றவரை போராடி முறியடித்தார். ஒட்டுமொத்த உயர் சாதி கூட்டத்துக்கு நடுவே நின்று போராடுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? தொலைக்காட்சி விவாதத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதமே சொல்லும். 

உயர் சாதியினர்கள் அ.தி.மு.க., தி.மு.க-வினர் செய்த ஊழல் குற்றத்தைப்  பேசுவார்கள். ஆனால், மறைந்த முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி செய்த குற்றத்தைப்பற்றி எதுவும் பேசமாட்டார்கள். ஏனெனில், அவர்களும் உயர் சாதியினர்தான். ஏன், போஃபர்ஸ் ஊழல் வழக்கில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இடமில்லையா? 8 வயது காஷ்மீர் சிறுமியைச் சீரழித்திருக்கிறார்களே... அவர்கள் யார்? கருவறைக்குள்தானே அவளைச் சீரழித்தார்கள். அந்தக் கோயில் பூசாரி, அவர் மருமகன், அவனின் நண்பன், பின்னர் பி.ஜே.பி. பிரமுகர் என இத்தனைபேர் சீரழித்திருக்கிறார்கள். அவலத்திலும் அவலம், இது சம்பந்தமாக விசாரணை நடத்தவந்த காவல் துறையைச் சேர்ந்தவர்களும் அவளைச் சீரழித்திருக்கிறார்கள். 8 நாள்களாகச் சித்ரவதை செய்து, அவளைக் கொன்று வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இது, நேற்று நடந்த சம்பவம் இல்லை. 4 மாதங்களுக்கு முன்னர் நடந்தது. அந்த வழக்கு வெளியே வரவே இல்லை. பி.ஜே.பி-யினர் காசைக் கொடுத்து தடுத்துள்ளனர். பி.ஜே.பி-யின் அனைத்து அமைச்சர்களும் இதன் பின்னணியில் இருந்து வேலை பார்த்துள்ளனர். மக்களே... நீங்கள் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமெனில், அம்பேத்கரையும் பெரியாரையும் படிக்க வேண்டும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்