வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (16/04/2018)

கடைசி தொடர்பு:15:05 (16/04/2018)

பிரதமர் வீட்டு முன்பு தூக்குக்கயிறு போராட்டம்- அய்யாக்கண்ணு ஆவேசம்

``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் பிரதமர் வீட்டுக்குச் சென்று தூக்குக்கயிறு போராட்டம் நடத்துவோம்'' என்று மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார் அய்யாக்கண்ணு. 

                                       அய்யாக்கண்ணு

தமிழகம் முழுவதும் காவிரி என்ற ஒற்றை வார்த்தையால் ஸ்தம்பித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு கர்நாடகாவில் நடக்கும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டும் எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருந்து வருகிறது. மத்திய அரசின் விரோதப் போக்கைக் கண்டித்து அய்யாக்கண்ணு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

பெரம்பலூரில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பு உணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அய்யாக்கண்ணு பொதுமக்களிடம் வழங்கினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மத்திய அரசு வேண்டும் என்றே தமிழக மக்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. காவிரிக்கான போராட்டம் அறவழிப் போராட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. ஆனால், சில கட்சிகள் திசை திருப்ப முயலுகிறார்கள். பிரதமர் சென்னைக்கு வந்தபோது முதலிலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு மனுக் கொடுத்து நிர்பந்தம் செய்திருக்கலாம். ஆனால், தமிழக முதல்வர் பழனிசாமி இறுதியாக கொடுத்து காலம் தாழ்த்திவிட்டார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுபோல் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து தமிழகத்துக்குத் தண்ணீர்விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னை மெரினா பீச்சில் 24 மணி நேரமும் அங்கேயே இருந்து 90 நாள்களுக்குப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். கொடுக்கவில்லையென்றால்  பிரதமர் வீட்டுக்குச் சென்று தூக்குக்கயிறு போராட்டம் நடத்துவோம்'' என்று எச்சரித்தார்.