வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (16/04/2018)

கடைசி தொடர்பு:15:47 (16/04/2018)

திருமணம் முடிந்த கையோடு போராட்டக் களத்துக்கு வந்த புதுமணத் தம்பதி! #BanSterlite

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி பனிமய அன்னை பேராலயம் முன்பு நடைபெற்றுவரும்  போராட்டத்தில், புதுமணத் தம்பதியும் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர். 

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த 64 நாள்களாக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதைத் தொடர்ந்து சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள், லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் எனப் பல தரப்பினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற பனிமய அன்னைப் பேராலயம் முன்பாக நேற்று கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு,  கறுப்பு பலூனும் பறக்கவிடப்பட்டது. பனிமய அன்னை பேராலய வளாகத்துக்குள் பந்தல் அமைத்து, 2வது நாளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில்  ஈடுபட்டுவருகின்றனர். இன்று காலை சின்னக்கோயில் என்றழைக்கப்படும் திரு இருதய பேராலயத்தில்,  தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும், பனிமய அன்னை ஆலய வளாகத்தில் உள்ள போராட்டப் பந்தலில் அமர்ந்து,  "மீசைய முறுக்கு ஸ்டெர்லைட் ஆலையை நொறுக்கு" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தம்பதிகளுடன், திருமணத்துக்கு வந்தவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.

புதுமணத் தம்பதி

புதுமணத் தம்பதிகளிடம் பேசினோம், "எங்க ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் தூத்துக்குடிதான். இந்த ஸ்டெர்லைட் ஆலையினால என்னென்ன பாதிப்புகள் என்பது நல்லாவே தெரியும். 64 நாள்களாக கிராமத்து மக்கள் தொடர்ந்து போராட்டிக்கிட்டுவர்றாங்க. ஆரம்பத்தில், இந்த ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தலைதூக்கும் போதெல்லாம் ஜாதி, மதத்தைக் காரணம் காட்டி மக்களின் ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டது. ஆனால், தற்போது மக்களின் ஒற்றுமை வலுவாக உள்ளது.

போராட்டத்துக்கு சாலை ஓரத்தில் போலீஸார் அனுமதி அளிக்காததால், இந்த மாதா கோயில் வளாகத்தில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால், தற்போதும் கிறிஸ்தவர்கள் போராட்டம் என போராட்டத்தை ஒடுக்கப்பார்க்கின்றனர் சிலர். இது ஜாதி, மதம் சாராத உயிர்வாழ்வதற்கான  தூத்துக்குடி மக்களின் போராட்டம்" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க