`எனது தொகுதியில் எந்தப் பணியும் நடக்கல' - கலெக்டருக்கு 10 நாள் கெடு விதித்த பெண் எம்.எல்.ஏ | opposition mla has argued with district administration for welfare schemes

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (16/04/2018)

கடைசி தொடர்பு:15:48 (16/04/2018)

`எனது தொகுதியில் எந்தப் பணியும் நடக்கல' - கலெக்டருக்கு 10 நாள் கெடு விதித்த பெண் எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் நலப் பணிகளைச் செய்யாமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான பூங்கோதை ஆலடி அருணா குற்றம் சாட்டினார். 10 நாட்களில் பணிகளைச் செய்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்..

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் நலப் பணிகளைச் செய்யாமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக, தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பூங்கோதை ஆலடி அருணா குற்றம் சாட்டினார். 10 நாள்கள் கெடு விதித்துள்ள பூங்கோதை எம்.எல்.ஏ., அதற்குள் பணிகளைச் செய்து முடிக்காவிட்டால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கெடு விதித்த எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் சட்ட மன்றத் தொதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., பூங்கோதை ஆலடிஅருணா, கடந்த இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தத் தொகுதியில் மக்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளார். தற்போது, சில திட்டங்களுக்குத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பரிந்துரைசெய்துள்ள நிலையிலும் அவை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து இன்று மனு அளித்தார். அதில், ’’ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 2016-ம் ஆண்டு, தாலுகா மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், அந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவரும் 6 நர்ஸ்களும் மட்டுமே உள்ளனர். மகப்பேறு, எலும்பியல், குழந்தைகள் நலம், மயக்கவியல் ஆகிய துறைகளுக்கான டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.  

கடந்த ஆண்டு, இந்த மருத்துவமனையில் 22 சிசேரியன் சிகிச்சையும் 18 கருத்தடை சிகிச்சைகளும் மட்டுமே நடந்துள்ளன. மருத்துவர்கள், சிகிச்சைக்கு வருபவர்களை  பாளையங்கோட்டை அல்லது தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் அவலம் நடக்கிறது. சுமார்   60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 24 படுக்கை வசதிகொண்ட இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக யாரையும் சேர்க்காமல் வெளியூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். மருத்துவ உபகரங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடக்கின்றன. சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்காக 11 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டும், அதையும் இதுவரை வழங்கவில்லை.

பூங்கோதை எம்.எல்.ஏ

பாப்பக்குடி, கீழப்பாவூர், கடையம் கூட்டுக்குடிநீர் திட்டம், கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக 46.55 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், திட்டத்தைத் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டும் இதுவரை 50 சதவிகிதப் பணிகள்கூட நிறைவேற்றப்படாமல்  உள்ளது. இதுபோன்று, அனைத்துப் பணிகளையுமே செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதை ஆய்வுசெய்து, உடனே நிறைவேற்ற வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூங்கோதை, ‘’ஆலங்குளம் சட்ட மன்றத் தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணியும் நடக்கவில்லை. அந்தத் தொகுதிக்கான எந்த வளர்ச்சித் திட்டத்தையும் செய்யாமல் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ஒதுக்கப்பட்ட நிதியையும் செலவு செய்யாமல் புறக்கணிக்கிறார்கள். குடிநீர்த் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் என எதுவுமே நடக்கவில்லை. அதனால், அடுத்த 10 நாள்களில் பணிகளைத் தொடங்காவிட்டால், பொதுமக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவேன்’' எனத் தெரிவித்தார்.