'இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்!' - கலெக்டர் ஆபீஸை பதறவைத்த 6 பேர்

கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயற்சி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கைக்குழந்தையுடன் 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம், வெப்படைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குருசாமி - மஞ்சுளா தம்பதி. குருசாமி இறந்துவிட, மஞ்சுளா தன்னுடைய இரு மகன்களான கார்த்தி மற்றும் பிரகாஷ் ஆகியோருடன் வசித்துவந்தார். கார்த்திக்கிற்கு, மனைவி மற்றும் கைக் குழந்தையும், பிரகாஷுக்கு ருக்மணி என்ற மனைவியும் உள்ளனர்.

இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு கலெக்டரிடம் மனு கொடுக்க கூட்டம் குறைவாகவே இருந்தது. இருந்தும் காவிரிக்காக தற்போது தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுவதையொட்டி, முன்னெச்சரிக்கையாக,  அதிக அளவில் போலீஸார் பணியில் இருந்தனர்.

இந்த நிலையில், 'ஈரோடு கோட்டை, பிருந்தா வீதியில் எங்களுக்குச் சொந்தமான 80 கோடி ரூபாய் மதிப்பிலான பூர்வீக சொத்தை, எங்களுடைய உறவினரான ஈரோடு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் செந்தில்குமார் அபகரித்துவிட்டார். இதுகுறித்து புகார் தொடுத்தும் எவ்வித பிரயோஜனமும் இல்லை. பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். கலெக்டர் இப்போ இங்க வந்தாகணும்' என பைக்கில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து  மஞ்சுளா, கார்த்தி, செல்வி, பிரகாஷ், ருக்மணி ஆகியோர் கைக்குழந்தையான விக்னேஷூடன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைப் பார்த்து பதறிப்போன அதிவிரைவுப் படையினர், தீக்குளிக்க முயன்றவர்களைத் தடுத்துநிறுத்தி, 5 பேரையும் கைதுசெய்து, விசாரணைக்காக சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!