வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (16/04/2018)

கடைசி தொடர்பு:18:00 (16/04/2018)

'ஜெயலலிதாவைப்போல துணிச்சல் இருக்கா?'- முதல்வரைச் சீண்டும் தங்க தமிழ்ச்செல்வன்

"ஜெயலலிதா ஆட்சிதான் நடக்கிறது என்று கூறும் எடப்பாடி அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 2013ல்  ஜெயலலிதா உத்தரவிட்டதைப்போல, தற்போது ஏன் எடப்பாடி அரசு உத்தரவிடவில்லை?  எடப்பாடிக்கு துணிச்சல் இல்லை என்பதே உண்மை" என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் காட்டமாகக் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட  வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்  கண்டனப் பொதுக்கூட்டம்  தூத்துக்குடியில் நாளை நடக்க உள்ளது. இதில், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,  டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசுகிறார்.  பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையைப் பார்வையிட வந்த தங்க தமிழ்ச்செல்வன், "ஜனநாயக நாட்டில்  தனி மனிதன் போராட அரசு அனுமதி  அளிக்க வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் கிராம மக்களை காவல்துறைமூலம்  ஒடுக்குகிறது இந்த அரசு.        6 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் போராட்டம் வெடித்துள்ளது. மாணவர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் இந்த ஆலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவருகின்றனர். ஆனால், மக்களின் இப் போராட்டங்களை மாநில, மத்திய அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு சொன்னதைத்தான் மாநில அரசு செய்துவருகிறது. 

தங்கத் தமிழ்ச்செல்வன்

கடந்த 2013ல் இந்த ஸ்டெர்லைட் ஆலையை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மூடச் சொன்னது உண்மைதான். ' ஜெயலலிதா அரசுதான் நடந்துவருகிறது. நாங்கள் ஜெயலலிதா வழியில்தான் நடந்துவருகிறோம்' எனச் சொல்லி வரும் எடப்பாடி தலைமையிலான அரசு, தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூட ஏன் உத்தரவிடத் தயங்குகிறது? ஜெயலலிதாவைப் போல, ஆலையை மூட  உத்தரவிடும் அளவுக்கு எடப்பாடியாருக்குத் துணிச்சல்  இல்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை நிறைவேற்ற முடியாத அரசாக இந்த அரசு உள்ளது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம் என்ற பெயரில் இருந்த போராட்டத்தில்,  மத்திய அரசைக் கண்டித்தும், மோடியைக் கண்டித்தும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.  மத்திய அரசுக்குப் பயந்து பயந்து நடப்பதால், மாநில அரசின் உரிமைகள் பறிபோகின்றன. 

தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், 2 நாள்களில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். தீர்ப்பு வந்ததும், மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத எடப்பாடி ஆட்சி கலைக்கப்படும். பின்னர்தான் தமிழகத்துக்கு நல்ல விடிவுகாலம் பிறக்கும்"என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க