வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (16/04/2018)

கடைசி தொடர்பு:16:40 (16/04/2018)

நிர்மலா தேவி மீதான புகாரை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு! துணைவேந்தர் செல்லதுரை அறிவிப்பு

மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாகப் பேராசிரியை நிர்மலா தேவியின் மீது குற்றம் சாட்டப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்னை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரை கூறியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரை

தற்போது டெல்லியில் இருக்கும் துணைவேந்தர் செல்லதுரை பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில், ``நிர்மலா தேவியும் அந்த மாணவிகளும் யார் என்றே தெரியவில்லை. குற்றவாளிகள், தங்கள் தவறுகளை மறைக்க பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதனால் இதையெல்லாம் நம்பிவிட முடியாது. செல்போன் உரையாடலைப் பேசியதை அவரே ஒப்புக்கொண்டிருந்தாலும், அவர் பின்னால் இருந்து யாராவது இயக்கி இருக்க வாய்ப்பு உண்டு.

கடந்த மார்ச் 13-ம் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சியைக் காண 3 லட்சம் பேர் வந்து சென்றனர். இதில் அவரும் வந்திருக்கலாம். இதை வைத்துக்கொண்டு எவ்வாறு முடிவு செய்ய முடியும். அவர் செய்வது எல்லாரும் ஒரு கற்பனை சமாசாரமே. இதில் உண்மை இருப்பதுபோலத் தெரியவில்லை. ஆனாலும், இதில் தவறு இருப்பின், அதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படும். அதேபோல், இந்தப் புகார் குறித்து 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.