வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (16/04/2018)

கடைசி தொடர்பு:18:20 (16/04/2018)

'புகாருக்குப் பிறகுதான் மணல் கொள்ளை அதிகமா நடக்குது’-போலீஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்

கிராம மக்கள் போராட்டம்

'மணல் கொள்ளையைத் தடுத்ததால், இளைஞர்களுக்கும் மணல் கொள்ளையர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதற்குக் காரணமான அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரைக் கைதுசெய்யும் வரை எங்களது போராட்டத்தை விடப் போவதில்லை' என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வெள்ளாற்றில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ் என்பவர் திருட்டுத்தனமாக ஆற்றுமணல் அள்ளுகிறார் என்று பொதுமக்களே பலமுறை, ஜே.சி.பி மற்றும் லாரிகளைச் சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், இன்று வரை அவர்மீது வழக்கும் இல்லை; நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதை எதிர்த்து, பொது மக்களே போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

கிராம மக்கள் போராட்டம்

இந்நிலையில்,  கடலூா்  மாவட்ட எல்லை செம்பேரியில், வெள்ளாற்றில் ஆளுங்கட்சி பிரமுகா்கள்  ஜே.சி.பி இயந்திரம்மூலம் இரண்டு லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தபோது, கடலூர் மாவட்டம் செம்பேரியைச் சேர்ந்த இளைஞர்கள், 'ஏன் அனுமதியில்லாமல் மணல் திருடுகிறீர்கள் எனக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கடலூா் மாவட்டம், பொன்னாடம் போலீஸார் மற்றும் அரியலூர் டி.எஸ்.பி மோகன் தாஸ் வந்து விசாரணை மேற்கொண்டனர். மணல் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதாகக் கூறியதையடுத்து, அவர்கள் கலைந்துசென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ”ஆளுங்கட்சியினரின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மணல் கொள்ளையைத் தடுப்பது அதிகாரிகளின் வேலையா, இல்லை மக்களின் வேலையா? வெள்ளாற்றுப் பகுதியில் இரவு நேரங்களில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ், மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவதால், அக்கரையைச் சேர்ந்த கடலூர் மாவட்ட மக்கள், வெள்ளாற்றுப் பாதுகாப்பு நலச்சங்கம்  ஒன்று அமைத்து,  மணல் கொள்ளையைத் தடுக்க பல்வேறு விதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தால், பணத்தை வாங்கிக்கொண்டு வழக்கம்போல விட்டுவிடுகிறார்கள்.

மணல் கொள்ளை

அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களிடம் புகார் கொடுத்தால், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால்,  இன்று வரை விசாரித்தபாடில்லை. நாங்கள் புகார் கொடுத்த நாளிலிருந்துதான் அதிகமாகத் திருடுகிறார். தற்போது மணல் அள்ளும்போது, பொதுமக்களும் இளைஞர்களும் கையும், களவுமாகப் பிடித்தோம். சுரேஷ், அவரது தம்பி ரமேஷ் இருவரும் போன் பண்ணி, 20-க்கும் மேற்பட்ட அடியாட்களை வரவைத்து, எங்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதற்கு, ஆட்சியர் என்ன சொல்லப்போகிறார். இதற்குத்தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்களுக்கு முடிவு தெரியும் வரையிலும்விடப் போவதில்லை'' என எச்சரித்தனர்.