வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (16/04/2018)

கடைசி தொடர்பு:18:40 (16/04/2018)

டெல்லி எய்ம்ஸில் 5 மாதமாக டாக்டராக வலம் வந்த வாலிபர் சிக்கினார்!

எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி மருத்துவர் கைது

டெல்லி எய்ம்ஸில் 5 மாதமாக டாக்டராக வலம் வந்த வாலிபர் சிக்கினார்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே போலி டாக்டராகப் பணியாற்றிய 19 வயது இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர். 

எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டர் கைது

இந்திய மருத்துவத்துறையின் அடையாளமாகப் பார்க்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே போலி டாக்டர் கைதுசெய்யப்பட்டது மருத்துவர்களிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதுசெய்யப்பட்டவரின் பெயர், அட்னன் குர்ராம். பாதுகாப்பு மிகுந்த இந்த மருத்துவமனையிலேயே 5 மாதங்களாகப் போலி மருத்துவராக வலம்வந்திருக்கிறார்.

மிகவும் நன்றாகப் பழகக்கூடிய குர்ராம், போலி அடையாள அட்டையுடனும் கழுத்தில் எப்போதும் ஸ்டெதர்கோப்புடனும், மருத்துவம் படிக்கும் சக மாணவர்களுடன் வாட்ஸ்அப் வழியாக நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவர்களுக்கான கருத்தரங்கங்களில் கூடப் பங்கேற்றுள்ளார். ஐந்து மாதங்களாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் இவர் சுற்றி வந்தும் யாரும் கண்டுபிடிக்கவில்லை.  கடந்த சனிக்கிழமை, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களுக்கான மாரத்தன் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஓட வந்த குர்ராமிடம் சிலர் விசாரித்துள்ளனர். பதிலில் திருப்தியடையாத மருத்துவர்கள், அவரைப் பிடித்து  போலீஸாரிடம்  ஒப்படைத்தனர். தற்போது அட்நன் குர்ராம், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ரெஸிடென்ஸியல் மருத்துவர்கள் சங்கத் தலைவர் ஹர்ஜித் சிங் கூறுகையில், ''இந்த மருத்துவமனையில் 2,000 ரெஸிடென்ஸியல் டாக்டர்கள் பணிபுரிகின்றனர். ஒவ்வொருவரையும் அறிந்து வைத்திருப்பது சிரமமானது. இது, குர்ராமுக்கு வசதியாகிப் போய்விட்டது ''என்றார்.

டெல்லி போலீஸார் கூறுகையில், ''குர்ராம் போலி டாக்டராகப் பணியாற்றியதற்கான பின்னணி தெரியவில்லை. டாக்டராக ஆசைப்பட்டதாகவும்,  அதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் புகுந்து டாக்டர் போல வலம் வந்ததாகவும் கூறுகிறார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். ஃபேஸ்புக் பதிவில் பல புகைப்படங்களில் ஸ்டெதஸ்கோப்புடன் காணப்படுகிறார்.  மருந்துகள்குறித்து தெளிவான அறிவும் அவருக்கு இருக்கிறது. ஜூனியர் ரெஸிடென்ஸியல் டாக்டர் என்றும், இளநிலை மருத்துவம் படித்து வருவதாகவும் கூறி  எய்ம்ஸ் டாக்டர்களை ஏமாற்றியுள்ளார் '' என்று தெரிவித்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த குர்ராம், டெல்லி ஜமுனா நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க