வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (16/04/2018)

கடைசி தொடர்பு:19:40 (16/04/2018)

`மூன்றாம் பாலினம் அல்ல; நீங்கள்தான் முதல் பாலினம்' - வேலூரில் களைகட்டிய திருநங்கைகள் மாநாடு!

வேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பில், `தென்னிந்திய திருநங்கைகளின் மாநாடு’, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில்  உள்ள அண்ணா கலையரங்கத்தில்  நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு, கேரளா,  புதுச்சேரி உள்பட பல்வேறு மாநில திருநங்கைகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக, வணிக வரி மற்றும்  பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வி.ஐ.டி வேந்தரான ஜி.விஸ்வநாதன் மற்றும் திரைப் பிரபலங்கள் நடிகை ராதா, பின்னணிப் பாடகி அனுராதா, சச்சு  மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டனர். திருநங்கைகளுக்கான அங்கீகாரம்  கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்  இந்த மாநாடு அரங்கேற்றப்பட்டது.  பரத நாட்டியம், கரகாட்டம் போன்ற பாரம்பர்ய  கலை நடனங்களோடு நிகழ்ச்சி  தொடங்கியது.  

மாநாட்டில் திருநங்கைகள், ஐந்து  கோரிக்கைகளை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் வழங்கினர். ``திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திருநங்கைகள் சார்பில் ஒரு தலைவி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களை 'நாயக்' என அழைக்கின்றனர். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நாயக்குகளுக்கு, அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்குத் தனிப் பட்டா கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.  

பிறகு, மாநாட்டில் சாதித்த திருநங்கைகளின் பெயர்களைச் சுட்டிக்காட்டினர். இதில், வேலூரில் கிட்டத்தட்ட 32 திருநங்கைகள் தங்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர் என அவர்களின் சேவை பற்றிக் கூறினர். சிறப்பு விருந்தினராக வந்தவர்கள், திருநங்கைகளை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார்கள்.

முதலில் பேசிய ராதா,  ``மகாபாரத்தில் மிகவும் வலிமையான ஒரு கதாபாத்திரம் என்றால், அது சிகண்டிதான். அப்படிப்பட்ட  பலமானவர்களாகவே நான் உங்களைப் பார்க்கிறேன். ஆணை விட, பெண்ணை விட நீங்கள்  பலமானவர்கள். நீங்கள் தனிப் பிறவி கிடையாது. நீங்கள் தனியான சமூகம் கிடையாது. எங்களில் பொதுவானவர்கள் நீங்கள். இதை முதலில் நாங்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இதைத் தாண்டிய ஒன்று உள்ளது, அதுதான்  'தன்மானம்'.   தன்மானம்  இருந்தால், நீங்கள் யாரிடமும் சென்று கெஞ்சவேண்டிய அவசியமில்லை. தன்மானம் இருந்தாலே உங்களைத்தேடி எல்லாம் வரும்'' என்றார். 

பிறகு பேசிய அனுராதா, ``இதற்கு சில வருடங்களுக்கு முன்பே  அண்ணா கலை அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது எப்படி வசதிகள் இல்லாமல் இந்த அரங்கம் இருந்ததோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறது. அரசு, போட்ட ரோட்டையே திரும்பிப் போடுகிறது. ஆனால், இந்தக் கலையரங்கத்தை மட்டும் அப்படியே விட்டுள்ளது. அடுத்த வருடமாவது மாற்றி அமைத்திருக்கிறார்களா? என்பதைப் பார்ப்பதற்கென்றே வருவேன் என்று கூறினார். சிவனும், சக்தியும் சேர்ந்தால் மாஸ். நீங்களெல்லாம் மாஸானவர்கள்'' என்று கூறி திருநங்கைகளை மகிழ்ச்சிப்படுத்த, பாடலையும்  பாடினார். 

``ஓர் ஆணால் ஆணுக்கான உணர்வுகளை மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். பெண்ணுக்கு பெண்ணின் உணர்வுகளை மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். ஆனால், ஒரு திருநங்கையால் மட்டும்தான் ஆண்களையும்,  பெண்ணின் மனதையும் புரிந்துகொள்ள முடியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் பின்னால் நீங்கள் இல்லை. எங்களுக்கெல்லாம் முன்னால்தான்  நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் மூன்றாம் பாலினம் இல்லை,  நீங்கள்தான் முதல் பாலினம்'' என்றார், வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.  

சிறப்பு விருந்தினர்களின் உரைகளுக்குப் பிறகு, மாநாட்டில் தென்னிந்திய திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது. அதில்,           2018 - ம் ஆண்டுக்கான தென்னிந்தியத் திருநங்கை அழகியாக வேலூரைச் சேர்ந்த சுவப்னா  தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-ம் இடத்தில் சென்னையைச் சேர்ந்த மொபினா,  3-ம் இடத்தில் புதுச்சேரியைச்  சேர்ந்த ஷில்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  திருநங்கைகளின் வாழ்வியல்குறித்த குறும்படத் தகடு வெளியீடும் நடைபெற்றது.