கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவது எப்போது? - விவசாயிகள் குமுறல்

Kollidam Dam

'வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேமிக்கவும், குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கவும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்தார். ஆனால், தடுப்பணைகள் கட்ட ஆய்வு நடைபெறுகிறதே ஒழிய, பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  

கொள்ளிடம் ஆறு

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தார். அவர் மறைந்த பிறகு, `அம்மா அறிவித்தபடி தடுப்பணைகள் கட்டப்படும்’ என்று நாகையிலும், கடலூரிலும் நடந்த எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தார். தடுப்பணைகளுக்காக, முதல்கட்டமாக ரூ.31 கோடி ஒதுக்கப்படுவதாக சட்டமன்றத்திலும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  

ஏற்கெனவே, கொள்ளிடம் ஆற்றில் ஆதனூருக்கும் குமாரமங்கலத்துகும் இடையே தடுப்பணை கட்ட முடிவாகி இருக்கிறது. இந்நிலையில், கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகில், சந்தப்படுகை - பெராம்பட்டுக்கு இடையே தடுப்பணை கட்ட, சீர்காழி அ.தி.மு.க எம்.எல்.ஏ., பாரதி தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று (16.04.2018) ஆய்வுசெய்து முடிவெடுத்துள்ளனர். இங்கு தடுப்பணை கட்டினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும், குடிநீர் திட்டங்களுக்கு உதவும், பாசன பயன்பாடுகளுக்குப் பயன்படும் என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாய சங்க பிரமுகர் ஒருவர், `கடந்த 2014-ம் ஆண்டு முதல் மீண்டும் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்வதுதான் நடக்கிறதே ஒழிய, தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகள் ஏதும் நடக்கவில்லை. எப்போதுதான் இந்தத் தடுப்பணைகள் கட்டுவார்கள்? அப்போதுதான் எங்கள் வாழ்க்கை மிளிரும்’’ என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!