'எங்கள் உதவித்தொகையை மோசடி செய்றாங்க'- பேராசிரியர்கள்மீது மாணவர்கள் பகீர்

''அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மாணவர்களுக்குக் கொடுக்கவேண்டிய கல்வி உதவித்தொகையை பேராசிரியர்கள் மோசடி செய்திருக்கிறார்கள்'' என்று மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் மேலக்கருப்பூர் கிராமத்தில், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, அரியலூர் இன்ஜினீயரிங் கல்லூரி. இக்கல்லூரியில், 600-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் கல்வி பயின்றுவருகின்றனர். மேலும், 65 பேர் பேராசிரியர்களாகவும் அலுவலர்களாகவும் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், கல்லூரியில் உள்ள எட்டுப் பேராசிரியர்களை எந்தவித காரணமும் இன்றி பணிநீக்கம் செய்ததால், ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இதைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                                மாணவர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்களிடம் பேசினோம். ”அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எந்த வசதியும் இல்லாமல் மாணவர்கள் படித்துவருகிறார்கள். இதைக்  கல்லூரி நிர்வாகத்திடம் சொன்னால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதுமட்டுமில்லாமல், கடந்த 8 மாதமாக சம்பளம் கொடுக்காத பேராசிரியர்கள், நிர்வாகத்திடம் சம்பளம் கேட்டதற்காகப் பணிநீக்கம் செய்துள்ளார்கள். அதேபோல, அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் மோசடிசெய்துள்ளார்கள். கணினி ஆய்வகம் மற்றும் லேப் வசதி முழுமையாகச் செய்துதருவதில்லை'' என்றனர்.

மேலும், அதிகாரிகள் கல்லூரி ஆய்வின்போது வேறு கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களைக்கொண்டு இக்கல்லூரியில் பணியாற்றுவதாகக் கூறி, கல்லூரி நிர்வாகம் ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாணவர்கள் கலைந்துசென்றனர். ''எங்களது கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால், மீண்டும் போரட்டம் நடத்துவோம்'' என்று எச்சரித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!