வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (16/04/2018)

கடைசி தொடர்பு:10:52 (17/04/2018)

'ஃபேர்வெல் டே' நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - களைகட்டிய கிராமம்

'ஃபேர்வெல் டே' நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - களைகட்டிய கிராமம்

ஈராசிரியர் பணியாற்றும் அரசுப் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு பிரிவு உபச்சார விழாவைத் தங்களின் சொந்தச் செலவில், கேக், சிக்கன் பிரியாணி, பரிசுப் பொருள்களுடன் நடத்திமுடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள், அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.

மாணவிகளுடன் விளையாடும் ஆசிரியர்கள்

'ஃபேர்வெல் டே' என்றாலே பெரும்பாலும் அதற்கென்று ஒரு கேட்டகரி இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள்தான் ரொம்பவும் உணர்வுபூர்வமான கொண்டாட்டமாக நடத்தி, ஃபீலிங் காட்டுவார்கள். 20 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் பாடிய 'முஸ்தபா... முஸ்தபா...' பாடல், இதுபோன்ற பிரிவு உபசார நிகழ்ச்சிகளில் தவறாமல் ஒலிக்கும் தேசியஉதவி ஆசிரியர் முனியசாமி கீதமாக இருந்தது. இதுபோன்ற 'ஃபேர்வெல் டே' கொண்டாட்டங்கள் மெள்ள மெள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பரவி வருகின்றன. தவிர, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி ஓய்வு பெறுவோருக்கு சக ஊழியர்கள்  பிரிவு உபசார விழா நடத்துவதும் வழக்கமாக உள்ளது. தற்போது, இந்த பிரிவு உபசார விழாக்கள் அரசு தொடக்கப்          பள்ளி வரை பரவிவிட்டன. தங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பை முடித்துச் செல்லும் 11 மாணவ, மாணவிகளுக்கு பிரிவு உபசார விழாவை நடத்திச் சிறப்பித்துள்ளனர், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் உதவி ஆசிரியர் முனியசாமி ஆகியோர். அவர்களின் முயற்சிக்கு சக மாணவர்களும் உதவிபுரிந்துள்ளனர்.

அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில்தான் இந்த விழா நடைபெற்றது. ஒருபுறம் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. மற்றொரு புறம், 'கமகம' சிக்கன் பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தது. ஐந்து வருடங்களாக இந்தப் பள்ளியில் படித்து முடித்துவிட்டு, ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் செல்லும் 11 குழந்தைளில் 6 பேர் பெண் பிள்ளைகள். அவர்கள் அனைவரும் சேலை கட்டிக்கொண்டு விழாவில் பங்கேற்றனர். ஆண் குழந்தைகளில் நால்வர் பேன்ட், சட்டையுடன் கலந்து கொண்டனர். பாண்டி என்ற மாணவன் மட்டும் உடல்நிலை சரியில்லாமல் நான்கு நாட்களாக பள்ளிக்கு வராமலிருந்தான். அவனை இந்த விழாவில் பங்கேற்காமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஆசிரியர் முனியசாமி, பாண்டியையும் அழைத்துவந்து அமர வைத்திருந்தார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 

விழா நடத்திய ஆசிரியர்கள்

தவிர, தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பிரிவு உபச்சார விழா நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டு, தினசரி மற்றும் ஊடக செய்தியாளர்களும் ஏராளமாக வந்திருந்தார்கள். இவர்களைத் தவிர, மற்ற வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளும் புதிய ஆடையில் பட்டாம் பூச்சிகளாக  பள்ளியைச் சுற்றிச்சுற்றி வலம் வந்துகொண்டிருந்தார்கள். கொண்டாட்டமும், கும்மாளமும் எல்லா குழந்தைகளிடமும் நிரம்பி வழிந்தது. இந்த நிகழ்ச்சி, 11 குழந்தைகளுக்கானது என்றாலும், கிராமத்துக் குழந்தைகள் அருமையாக அதை முன்னெடுத்துச்சென்றார்கள். நிகழ்ச்சியில் அந்த மாணவ, மாணவியர் தங்களது அனுபவங்கள் குறித்துப் பேசினார்கள். அதில் பெரும்பாலானோர், தங்களின் தலைமை ஆசிரியை சாந்தியையும், ஆசிரியர் முனியசாமியையும் வெகுவாகப் பாராட்டினார்கள்.

பொதுவாக ஆசிரியர்கள்தான், குழந்தைகளைப் பாராட்டுவார்கள். இங்கே குழந்தைகள், தங்களின் ஆசிரியர்களைப் பாராடாடியது புதுவிதமாக இருந்தது. அதிலும், மாணவி பாலாமணி பேசியது எல்லோருடைய உள்ளத்தையும் தொட்டது.

மாணவி

"இந்தப் பள்ளியையும், உங்களையும் பிரிந்துசெல்கின்ற இந்த நாளை நினைக்கும்போது, எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஐந்து வருடங்கள் இவ்வளவு வேகமாகப் போகும்னு நாங்க நினைக்கல. முனியசாமி சார் இந்தப் பள்ளிக்கு வந்தபிறகு, எங்களை அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச்சென்றார். அன்னவாசலில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளுக்கு தலைமை ஆசிரியை அழைத்துச்சென்றார். களப்பயணமாக குடுமியான்மலை கோயிலுக்கும்,  வேளாங்கண்ணிக்கும் நாங்கள் சுற்றுலா சென்று வந்தோம். கல்வி என்பது பாடப் புத்தகங்களில் மட்டுமல்ல; களப் பயணங்களிலும் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். இதையெல்லாம் நாங்கள் எங்கள் பெற்றோரிடம் சொன்னபோது, அவங்க ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. பக்கத்து பள்ளியில் ஏதாவது விழா நடந்தால், மறுநாளே நம்ம பள்ளியிலே கொண்டாடணும்னு சொல்வாங்க. நாங்களும் அதில் கலந்துகொள்வோம். எங்கள் திறமைகளை வளர்க்கும் விழாக்களை, போட்டிகளை அடிக்கடி நடத்தி பரிசுகள் கொடுத்தீங்க. 'தீபாவளி' நாளன்று, நான்காம் வகுப்பு  படிக்கும் திவ்யதர்ஷினியின் தாத்தா இறந்ததால், நாங்கள் வெடியே வெடிக்கல. அதிசரசம், முறுக்கு, வடை எல்லாம் எங்க வீட்ல பண்ணல. புத்தாடைகள் எடுக்கவும் இல்லை. அதனால, எங்களுக்கு இந்தத் தீபாவளி பிடிக்கல' என்று உங்களிடம் சொன்னவுடன் நீங்கள் எங்களுக்கே தெரியாமல் உங்கள் ஊரிலிருந்து கொண்டுவந்திருந்த வெடிகளைக் காண்பித்து, யாருக்கு என்னென்ன வெடிகள் பிடிக்குமோ அதை எல்லாம் எடுத்து வெடியுங்கள் எனக் கூறினீர்கள். இனிப்புகள் கொடுத்து மகிழ்வூட்டினீர்கள். அன்று நமது பள்ளியில் குட்டி தீபாவளியை நாங்கள் கொண்டாடித் தீர்த்தோம். அப்போது, நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

கேக்

அதேபோல தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது, எங்களை எல்லாம் சேலை கட்டிவரச் சொல்லி, நமது பள்ளியில் பொங்கல் வைக்கச் சொன்னீர்கள். உங்கள் வழிகாட்டுதல்படி நாங்கள் பொங்கல் வைத்தோம். பொங்கல் பானையை நடுவே வைக்கச் சொல்லி, அதைச் சுற்றி தோழியர்களுடன் எங்களை கும்மியடிக்கச் சொன்னீர்கள். அதை போட்டோ எடுத்தீர்கள். மறுநாள், நாங்கள் கொண்டுவந்த பொங்கல் சீர் பற்றிய செய்தி, விகடன் இணையதளத்தில் வந்தவுடன், அதை வெளிநாட்டில் உள்ள எங்கள் அப்பாவுக்கு அனுப்புனீங்க. அதைப் பார்த்தவுடன், என்னோட அப்பா உங்களிடம், 'என்னோட பொண்ணு சேலைகட்டி இருக்கிறதைப் பார்த்து எனக்கு சந்தோஷ அழுகையே வந்திடுச்சு. எங்கள் கிராமத்தின் குழந்தைகளுக்கு, முதன்முதலாக சேலைகட்டி அழகு பார்த்த பள்ளியையும் ஆசிரியர்களையும் நாங்கள் மறக்க மாட்டோம்' என்று கூறியதாகச் சொன்னீர்கள். எங்களது அப்பா மட்டும் இல்லை; நாங்களும் அதனை மறக்க மாட்டோம்.

மாணவர்களுக்கு பிரியாணி விருந்து

பிறகு, 'சலாம் கலாம்' என்ற குறும்படத்தை போட்டுக் காண்பித்து, 'உங்கள் மனதில் இப்போ எந்த மாதிரியான எண்ணம் இருக்குனு' கேட்டீங்க. நாங்கள், 'எங்கள் தன்னம்பிக்கையும் ஊக்கமும் வளர்ந்துவிட்டது; அப்துல் கலாம் அய்யாவின் அக்னிச் சிறகுகள், இந்தியா-2020 புத்தகம் படிக்க ஆர்வமாக உள்ளது' என்றோம். உடனே எங்களது ஆசைபற்றி விகடன் பத்திரிக்கையில் சொல்லி செய்தி வெளியிட்டு, தலைமை ஆசிரியை சாந்தி'கலாம் அறப்பணி நல இயக்கத்தின்' சார்பில் அந்தப் புத்தகங்களைப் பெற்றுத் தந்தீர்கள். நமது பள்ளியில், பெற்றோர்கள் கூட்டம் போட்ட அன்று, எங்களது அம்மாக்களெல்லாம் எங்களோடு வந்து விளையாடியது, எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவங்ககிட்டேயிருந்து பாரம்பர்ய விளையாட்டுகளை நாங்க கத்துக்கிட்டோம். அவங்க எங்களோடு நொண்டி ஆட்டம் விளையாடியது, 'ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்துச்சு' விளையாடியது, பல்லாங்குழி விளையாடியதையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

எங்களது பிறந்தநாளைக்கூட நாங்கள் இதுவரை கேக் வெட்டி கொண்டாடியதில்லை. நீங்கள் எங்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தி, கேக் வெட்டி, பிரியாணி சாப்பிடவைத்து, நினைவுப் பரிசுகள் கொடுத்து, அன்பு காட்டுவதை நினைக்கும்போது, அவ்வளவு சந்தோஷமாக உள்ளது. ஐந்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு 'ஃபேர்வெல் டே' நடத்திய முதல் பள்ளி என்ற பெருமையும் நம் பள்ளிக்குத்தான் உண்டு. இந்த ஸ்கூல விட்டுப்போக எங்களுக்கு மனசே இல்லை. இனிமேல் இந்த ஸ்கூலுக்கு வரமாட்டோம்னு நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. நமது பள்ளியில் 'ஆண்டு விழா நடத்துவீங்க' என நினைத்தோம். ஆனால், இந்த ஆண்டு  வைக்கவில்லை. அடுத்த ஆண்டு விழா நடைபெற்றால், நாங்கள் எல்லாம் வருவோம். இந்தப் பள்ளி எங்களை மகிழவைத்தது; நெகிழ வைத்தது, விளையாட வைத்தது, கோபப்படவும், சண்டையிடவும் வைத்தது. நல்ல கல்வியைத் தந்தது. நல்ல ஆசான்களைத் தந்தது. இன்று மட்டும் எங்களுக்கு அழுகையைத் தந்தது" என்று அந்த ஐந்தாம் வகுப்பு மாணவி பேசி முடித்தபோது, அங்கு நிசப்தம் மட்டுமே நிலவியது. சிலருடைய விசும்பல் சத்தம் மெலிதாகக் கேட்டது. 

அந்த நிமிடம் எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் துளிர்த்து இனித்தது.


டிரெண்டிங் @ விகடன்