`போராட்டத்தை ஒடுக்கவே பிரியா இடைநீக்கம்' - கொந்தளிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள்! | kovai Law college students condemns the priya suspend

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (16/04/2018)

கடைசி தொடர்பு:21:30 (16/04/2018)

`போராட்டத்தை ஒடுக்கவே பிரியா இடைநீக்கம்' - கொந்தளிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள்!

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்

`சமுதாயப் பிரச்னைகளுக்கு முன்னின்று போராடக்கூடிய சட்டக் கல்லூரி மாணவர்களை ஒடுக்குவதற்காகவே, கோவை சட்டக் கல்லூரி மாணவி பிரியாவை  இடைநீக்கம் செய்திருக்கிறது, கல்லூரி நிர்வாகம்' என்று சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வகுப்பறையில் பேசியதற்காக, கோவை சட்டக் கல்லூரி மாணவி  இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம், தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரியாவின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர் குரல் கொடுத்துவரும் சூழலில், சிறுமி விவகாரம் குறித்து பேசியதால், பிரியா இடைநீக்கம் செய்யப்படவில்லை;  மாணவர்களிடம் சாதி, மத உணர்வுகளைத் தூண்டி பிளவுப்படுத்தும் நோக்கில் பேசியதாலேயே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று விளக்கம் கொடுத்திருக்கிறது, கல்லூரி நிர்வாகம்.

இந்நிலையில், இன்று  பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள், "பிரியாவின் இடைநீக்கம் எதேச்சையாக நடந்தது கிடையாது. திட்டமிட்டு அவரை சஸ்பென்ட் செய்திருக்கிறார்கள். எந்தவொரு பிரச்னையென்றாலும் சட்டக்கல்லூரி மாணவர்கள்தான் முதலில் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அதை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த சஸ்பென்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் கோபாலகிருஷ்ணன் முதல்வர் பொறுப்புக்கு வந்ததிலிருந்துதான் இதுபோன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தைக்கொண்டு இயங்கும் சட்டக்கல்லூரியிலேயே அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாட விடாமல் தடுக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். போராட்டங்களில் கலந்துகொண்டால், மதிப்பெண்களில் கை வைத்துவிடுவோம் என்றெல்லாம் கூட அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறது.

சட்டக் கல்லூரியிலேயே ஜனநாயகம் இல்லை. சாதி, மதத்தைச் சொல்லி மாணவர்களிடம் பிரியா பிளவை உண்டாக்கினார் என்று முதல்வர் சொல்வதில் துளியும் உண்மையில்லை. சிறுமி விவகாரம் தொடர்பாக பேசியதற்காகவே, எந்தவித விசாரணையும் இல்லாமல் பிரியாவை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். பிரியாவை இடைநீக்கம் செய்தது கல்லூரி முதல்வர். ஆனால், அதை ரத்துசெய்ய அவருக்கு அதிகாரம் இல்லையாம். இயக்குநர்தான் இதில் முடிவெடுக்க முடியும் என்கிறார். இதிலேயே இவர்களுடைய இரட்டை வேடம் தெரிகிறது. அதுமட்டுமல்லாது, இந்த விவகாரம்குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் நாங்கள் குற்றம் சுமத்தும் இரண்டு பேராசிரியர்கள்தான் இருக்கிறார்கள். பின்பு எப்படி விசாரணை உண்மையாக நடக்கும். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

வரும் வியாழக்கிழமை பிரியாவிடம் விசாரணை  நடத்தப்பட உள்ளது. அந்த விசாரணையின்போது, பேராசிரியர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டாலோ, பிரியாவின் இடைநீக்கத்தை ரத்துசெய்ய மறுத்தாலோ, தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாணவ அமைப்புகளை ஒன்றுதிரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம்" என்றனர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க