வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (16/04/2018)

கடைசி தொடர்பு:21:50 (16/04/2018)

`சக பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை' - கர்நாடக சட்டசபை செயலாளர்மீது புகார்!

மூர்த்தி - கர்நாடக சட்டசபை செயலாளர்பெங்களூருவில் உள்ள சட்டசபை செயலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, கர்நாடக சட்டசபை செயலாளருக்கு எதிராகப் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாகப் புகார் தெரிவித்துள்ள வழக்கறிஞர் சுதா கட்வா, ஊடங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், சட்டசபை செயலாளர் எஸ்.மூர்த்திக்கு எதிராகப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போதிலும், அதை போலீஸார் முதலில் பதிவு செய்ய மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுடன் தொடர்புகொண்டு பேசியதாகவும், அதன் அடிப்படையில் புகார் அளித்த போதிலும் 24 மணி நேரம் வரை அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபை செயலகத்தில் பணியாற்றும் சக பெண் ஊழியர்களை, செயலாளர் மூர்த்தி, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் முக்கியமான நபர் என்பதால், இந்த விவகாரம் தொடர்பாகச் சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்க விரும்புவதாகத் தெரிவித்தனர் என்று கட்வா கூறினார். ஊழியர்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, கர்நாடகப் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (கண்காணிப்பு பிரிவு) செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி பல்லவி அக்ருதி, இந்தப் பிரச்னை தொடர்பாக விரிவான புகாரை தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார். 

இதற்கிடையே தன் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்களை மூர்த்தி மறுத்துள்ளார். தான் ஒரு பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், குறிப்பிட்ட சிலர் தனக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதாகவும் மூர்த்தி தெரிவித்துள்ளார். 500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் சட்டசபை வளாகத்தில் உள்ளனர். இதுவரை யாரும் தனக்கு எதிராகப் புகார் தெரிவிக்கவில்லை. சிலர் தனக்கு எதிராகச் செயல்பட்டு இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்குத் தயார் என்றும் அவர் கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டசபைச் செயலாளருக்கு எதிராக இதுபோன்ற பாலியல் புகார் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க