வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (16/04/2018)

கடைசி தொடர்பு:23:00 (16/04/2018)

மழைக்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வேண்டும் - கலெக்டரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ!

மழையால் சுவர் இடிந்து பலியான பச்சிளம் குழந்தை மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி ஆகியோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி நெல்லை தொகுதி எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 

மழையால் சுவர் இடிந்து பலியான பச்சிளம் குழந்தை மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி ஆகியோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி நெல்லைத் தொகுதி எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 

நிவாரணம் கோரி மனு

நெல்லை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான தி.மு.க-வைச் சேர்ந்த ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து மனு அளித்தார். அதில், `மானூர் யூனியன் இத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த இடியுடன்கூடிய மழையின்போது இடி தாக்கி உயிரிழந்தார். மேலும் தச்சநல்லூர் மேலத்தெருவில் வசிக்கும் நாராயணன் என்பவரின் 4 மாத கைக்குழந்தை மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானது. கனமழைக்குப் பலியான இருவரது குடும்பத்துக்கும் அரசு நிவாரண தொகையை வழங்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். 

இது பற்றி அவர் கூறுகையில், `நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும் மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தினேன்.

அத்துடன், நெல்லையின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. குறிப்பாக, நெல்லை பேட்டையில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பாகக் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. அதனால் போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. 

நெல்லையப்பர் கோயிலின் கும்பாபிஷேக விழா 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதைக் காண்பதற்காகப் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு தரமான சாலை அமைத்துக் கொடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறேன்’’ என்றார். ஏ.எல்.எஸ்.லட்சுமணனுடன் நெல்லைப் பகுதி தி.மு.க செயலாளர் கோபி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோரும் மனு அளிக்கச் சென்றனர்.