திருநங்கைகள் படிக்க புதுச்சேரி அரசு உதவி - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

``திருநங்கைகள் படிக்க அரசு உதவிகள் செய்யப்படும்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

நாராயணசாமி

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகள் தினவிழா நேற்று கடற்கரை காந்தித் திடலில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய திருநங்கைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “உலகில் வாழும் அனைவர் போலவே, திருநங்கைகளும் சுயமரியாதையோடு வாழ உரிமை உள்ளது. திருநங்கைகள் என்பதற்காக அவர்களை ஒதுக்குவதென்பது அவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பது போலாகும். புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகின்ற நிலையில், திருநங்கைகள் குறித்தும் கணக்கெடுக்கப்படும். திருநங்கைகளுக்கு அரசு சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். 

இதன்மூலம் அவர்களுக்கு தொழில்புரிய வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் சுயமாகத் தொழில் தொடங்கவும் அரசு சார்பில் உதவி செய்யப்படும். படிக்க விரும்பும் திருநங்கைகளுக்கும் அரசு உதவிகள் செய்யும். மத்திய அரசு உதவி செய்யாவிட்டாலும் புதுச்சேரி அரசு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, “அரசு சார்பில் திருநங்கைகளுக்கு விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும். திருநங்கைகளை அவர்களின் குடும்பமே ஒதுக்கி வைக்கும் செயல் உண்மையில் வருந்தத்தக்கது. புதுச்சேரி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும்போது, திருநங்கைகளுக்கும் வழங்கப்படும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!