`குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது!’ - பேராசிரியை விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் மாணவிகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்கு எதிராகக் கல்லூரி முன் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுக்கவே, அவர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவரைக் கைதுசெய்வதற்காக போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால், நிர்மலா வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளே இருக்கவே, கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், வீட்டின் பூட்டை உடைத்து, அவரைக் கைது செய்த போலீஸார், விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். 

இந்நிலையில், பேராசிரியையின் ஆடியோ விவகாரம்குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``ஒழுக்கக்கேடான இச்செயல்குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் உயர்மட்ட விசாரணை நடத்துவார். குற்றவாளிகள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. காமராஜர் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கையின்படி, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்த சந்தானம், ஓய்வுபெறும்போது தலைமைச் செயலாளருக்கு இணையான பதவியில் இருந்தவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!