வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (16/04/2018)

கடைசி தொடர்பு:21:40 (16/04/2018)

`மத்திய அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதா ஸ்டெர்லைட் ஆலை?’ - ஆர்.டி.ஐ மூலம் கேள்வியெழுப்பிய வழக்கறிஞர்!

ஸ்டெர்லைட் நிர்வாகம் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த பரபரப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா ஆர்.டி.ஐ கேள்விகளை தொடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த பரபரப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா ஆர்.டி.ஐ கேள்விகளைத் தொடுத்துள்ளார்.

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆர்.டி.ஐ - பிரம்மாதூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இரு தினங்களுக்கு முன்பு வருகைதந்த மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன்பு 4 நாள்கள் நான் உண்ணாவிரதம் இருந்தேன். அன்று, மக்கள் யாருமே ஆதரவு தரத் தயாராக இல்லை. அனைவருமே வேலை கிடைக்கும் என்றே நினைத்திருந்தனர். அந்தச் சமயத்தில், ஆலை தரப்பில் என்னிடம் டீல் பேசினர். அவர்கள் அணுகியபோதும், தேர்தல் செலவுக்காக எனக்குப் பணம் கொடுத்தபோதும் மறுத்து விட்டேன்’  எனத் தெரிவித்திருந்தார். 

மத்திய அமைச்சரே தனக்கு ஆலை நிர்வாகம் லஞ்சம் கொடுக்க முன்வந்தது எனத் தெரிவித்திருப்பது தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா, மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், ’’மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற செய்தி, ஸ்டெர்லைட் நிர்வாகத்தைச் சேர்ந்த நபர்கள் மீது அமைச்சர் எடுத்த நடவடிக்கை மற்றும் கொடுத்த புகார் மனு நகல் வெளியிட வேண்டும்.

அமைச்சரால் கையொப்பமிடப்பட்ட ஸ்டெர்லைட் தொடர்பான ஆவண நகல், மேற்படி அமைச்சர், ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு என்னென்ன சான்றுகள் மத்திய அரசிடமிருந்து பெறுவதற்குப் பரிந்துரை செய்துள்ளார்?. சட்டப்படி லஞ்சம் கொடுப்பது தவறு என்ற அடிப்படையில், தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக அவர் யாரிடம் புகார் அளித்தார்?. இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து புகார் எதுவும் செய்துள்ளதா?.

தனக்கு லஞ்சம் கொடுக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சித்தது தொடர்பாக அவர் புகார் செய்துள்ளார் எனில், அந்தப் புகார் மனுவின் விவரம் தேவை. அவரது குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அமைச்சரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அல்லது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. எனில், அதன் விவரம், மத்திய அமைச்சரின் கருத்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் மறுப்புத் தெரிவித்து உள்ளதா?.

ஒருவேளை ஆலை நிர்வாகம் மறுப்பும் தெரிவிக்கவில்லை, மத்திய அமைச்சர் மீது புகாரும் தெரிவிக்கவில்லை எனில், அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது எனக் கருதலாமா?. அதன் அடிப்படையில் மெளனம் காக்கும் ஆலை நிர்வாகத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’’ எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சரின் கருத்து தொடர்பாகத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்தக் கேள்விகளை அவர் எழுப்பியிருக்கிறார்.