வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (17/04/2018)

கடைசி தொடர்பு:07:17 (17/04/2018)

தேனி அருகே ராட்சத காற்றாலையில் தீ விபத்து - ஒருவர் படுகாயம்!

ராட்சத காற்றாலையில் தீ விபத்து.! ஒருவர் படுகாயம்.!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடி பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தனியார் ராட்சத காற்றாலைகள் உள்ளன. இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டுவருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் என்பதால் எண்ணற்ற காற்றாலைகள் உள்ளன. தேனி அருகே ஜங்கால்பட்டியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான காற்றாலையில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. முன்னதாக ஒரு வார காலமாக காற்றாலையில் அதிக சத்தம் எழுந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதன் அடிப்படையில் இன்று காலை, காற்றாலை பராமரிப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசிறி அருகே இருவர், இடைப்பட்ட பகுதியில் ஒருவர் என மொத்தம் மூன்று ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர்.

காற்றாலை

அப்போது எதிர்பாராத விதமாக மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத பணியில் இருந்த ஊழியர்கள் புகையில் சிக்கினர். தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். அதில் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் ஆகியோர் காற்றாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.