'என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்' - கலெக்டர் ஆபிஸில் தீக்குளிக்க முயன்ற 80 வயது மூதாட்டி!

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கண்டமனூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டமனூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூதாட்டி குருவம்மாள்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (16.4.2018) காலை மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள், தங்களது மனுக்களோடு கலெக்டரை சந்திக்க வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கே வந்த குருவம்மாள், தனது பையில் வைத்திருந்த மண்ணென்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு வரிசையில் வந்து நின்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்குள்ள மக்கள் மூதாட்டியிடம் விவரம் கேட்டனர், ‘’என்னுடைய பெயர் குருவம்மாள், ஊர் கண்டமனூர், இரண்டாயிரம் ரூபாய் ஒத்திக்கு ஒரு வீட்டில் இருந்தேன். ஒத்தி முடிந்ததும் வீட்டை காலி செய்யச் சொன்னார்கள். எனக்கு யாரும் இல்லை. பிள்ளைகள் கைவிட்ட நிலையில், வேறு வீடு பார்த்துச் செல்லலாம் என்று கொடுத்த இரண்டாயிரம் ரூபாயைக் கேட்டேன். தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். எவ்வளவோ போராடியும் என் பொருள்களை எல்லாம் வெளியே தூக்கிவீசி விட்டார்கள். கண் தெரியாத நிலையிலும், துடைப்பம் செய்து பிழைத்து வருகிறேன். நடக்கவே முடியாத நிலையில் என்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். எனவே, என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’’ என்றார் கண்ணீரோடு. இச்சம்பவம் அறிந்து பாதுகாப்பில் இருந்த போலீஸார், மூதாட்டியை மீட்டு அழைத்துச்சென்றனர். ‘’நீங்க மட்டும் என்ன நியாயம் வாங்கி கொடுக்கவா போறீங்க?’’ என்று போலீஸைப் பார்த்து விரக்தியுடன் சொன்னார் மூதாட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!