தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உப்பளத் தொழிலாளர்கள்!

துாத்துக்குடியில் நடைமுறையில் இருந்த 144 தடையையும் மீறி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உப்பளத் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் நடைமுறையில் இருந்த 144 தடையையும் மீறி,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உப்பளத் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உப்பளத் தொழிலாளர்கள்

தூத்துக்குடியின் முக்கியத் தொழில்களில் உப்பு உற்பத்தியும் ஒன்று. இந்தியாவில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம்தான் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது.  இங்கு, சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள்மூலம்   உப்பு உற்பத்தி நடைபெற்றுவருகிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 லட்சம் டன்  உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின்மூலம் ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சம் டன் வரை உப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டு வருகிறது. 

இதில், உப்பு வாருதல், தலைச் சுமைகள், மூட்டை பிடித்தல், பவுடர் உப்பு பேக்கிங் செய்தல், உப்பு அரவை, பண்டல் போடுதல் என சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் உப்பளம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதில், ஆண் தொழிலாளர்களுக்கு 290 ரூபாயும், பெண் தொழிலாளர்களுக்கு 280 ரூபாயும் வழங்கப்பட்டுவருகிறது.  

உப்பளத் தொழிலாளர்கள் போராட்டம் 

உப்பளங்களில் வேலைசெய்பவர்களுக்கு, சரியான கழிவறை வசதிகள் இல்லை. அதேபோல, கடந்த 2017 மார்ச் மாதத்துடன் ஊதிய ஒப்பந்தம் முடிந்தும், புதிய ஊதியத்திற்கான பேச்சு வார்த்தைக்கு இன்னும் முதலாளிகள் அழைக்கவில்லை.  கேரள மாநிலத்தைப் போல, நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர் நலச்சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது, புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்களை அழைப்பது, ஆண்டுதோறும் கட்டாயக் கணக்கு முடிப்பைக் கைவிட வேண்டும். அவ்வாறு கணக்கு முடிக்கும் பட்சத்தில், சட்டப்படியான நிவாரணம்  வழங்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று  தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு  நடைமுறையில் இருந்தது. ஆனால், அந்தத் தடையை மீறி, தங்களின் வாழ்வாதாரத்திற்காக, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்தநாள்  விழாவிற்காக ஆட்சியர் சென்றுவிட்டதால்,  மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பனிடம் தங்களின் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.  தடை உத்தரவையும் மீறி உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!