வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (17/04/2018)

கடைசி தொடர்பு:09:54 (17/04/2018)

ஈரோட்டில் அம்பேத்கர் பதாகைகள் உடைப்பு - எஸ்.பி-யிடம் பட்டியலின மக்களின் அமைப்பு புகார்!

அம்பேத்கர்

ஈரோடு மாவட்டத்தில், டாக்டர் அம்பேத்கர் படத் தட்டிகளை உடைத்துச் சேதப்படுத்திய நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட்டியலின மக்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, சிவகிரி அருகேயுள்ள கந்தசாமிபாளையத்தில், ஈரோடு மாவட்ட அனைத்து பட்டியலின மக்களின் அமைப்பு ஒருங்கிணைப்புக் குழு சார்பில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதை முன்னிட்டு கந்தசாமிபாளையம் ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத் தட்டிகளை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கிழித்து எறிந்திருக்கின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த பட்டியலின மக்களின் அமைப்புகள், இந்தச் செயலில் ஈடுபட்டதாக கடைக்குட்டி, கார்த்தி, விஜி என்ற 3 பேரை அடையாளம் கண்டு, அவர்கள்மீது புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அளித்த புகார் மனுவில், ‘திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் தேசியத் தலைவர் அம்பேத்கர் படத்தை அவமதிப்புசெய்துள்ளனர். கடந்த 3 வருடங்களாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. எனவே, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, சமூக விரோதிகள்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.