சித்தன்னவாசலை உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் தூய்மைசெய்த மாணவிகள்!

'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், புகழ்பெற்ற சித்தன்னவாசல் வளாகத்தைக் கல்லூரி  மாணவிகளும் பேராசிரியர்களும் சுத்தம் செய்தனர்.

தூய்மை பணி


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில், இன்று  இந்திய தொல்பொருள் துறையின் சார்பில் 'தூய்மை இந்தியா திட்டம் சேவை' குறித்த முகாம் நடைபெற்றது. இந்த முகாம், சித்தன்னவாசலில் உள்ள இயற்கை சூழ்ந்த வெட்ட வெளியில் நடைபெற்றது. இதில், சென்னை, திருச்சி, ஆகிய பெருநகரங்களில் பணிபுரியும் தொல்லியல் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் இலுப்பூர் அருகில் பணம்பட்டியிலுள்ள மகாத்மா  கல்லூரியைச் சேர்ந்த  மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முகாமில் பேசிய தொல்லியல் அலுவலர்களும் கல்லூரிப்  பேராசிரியர்களும், சித்தன்னவாசல் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கினர். இதுபோன்ற தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பாதுகாக்கப்படவேண்டிய சிலைகளையும் சிற்பங்களையும் புடைப்புச் சித்திரங்களையும் எப்படியெல்லாம்  பாழ்படுத்துகிறார்கள் என்பதைக் கூறிவிட்டு, அதனால் ஏற்படும் இழப்புகளையும் விவரித்தார்கள். முன்பெல்லாம் அடுப்புக்கரி, சாக்பீஸ், கூர்மையான பொருள்களால் கிறுக்கிவிட்டுப் போவதை தங்களது வருகையின் அடையாளமாக சிலர் கருதினார்கள். அந்தப் பழக்கத்தைப் பெரும் முயற்சிகள் எடுத்து, தொல்லியல் துறை தடுத்துள்ளதையும் மாணவிகளுக்கு விவரித்தார்கள். பிறகு, மாணவிகள் மிகவும் உற்சாகமாக சித்தனவாசலைத் தூய்மை செய்தார்கள். 

தூய்மை பணி

அங்குள்ள ஏழடிப்பட்டம், முத்தமிழ்ப் பூங்கா, அறிவியல் பூங்கா மற்றும் படகுக் குழாம் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர். வரலாற்றுச்  சிறப்புமிக்க இடங்களில், தொல்லியல் துறை அலுவலர்களின் வழிகாட்டுதல்படி தூய்மைசெய்தார்கள். நாள் முழுவதும் அவர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த சுற்றுலாப் பயணிகளும் மாணவிகளுக்கு தங்களால் இயன்ற அளவு உதவினர். சில சுற்றுலாப் பயணிகள், மாணவிகள் தூய்மை சேவைக்கு மதிப்புக்கொடுத்து, தாங்கள் கொண்டுவந்திருந்த பிளாஸ்டிக் கவர், டம்ளர், பேப்பர் போன்றவற்றைக் கண்ட இடங்களில் வீசி எறியாமல், அதற்கென்று உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுக்  கவனம் ஈர்த்தார்கள். அவர்களிடம் பேசிய மாணவிகள், தங்களது நன்றியைக் கூறிக்கொண்டார்கள். மேலும், சுற்றிப்பார்க்க வந்த  பொதுமக்களிடம் தூய்மையே சேவை பற்றிய நோக்கத்தையும் அதன் அவசியத்தையும் மாணவிகள் எடுத்துக்  கூறினர். இதில், சித்தன்னவாசல் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் பொதுமக்கள் எனப்  பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!