வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (17/04/2018)

கடைசி தொடர்பு:08:21 (17/04/2018)

‘சுடுகாட்டைக்கூட விட்டுவைக்க மாட்டேங்குறாங்க’ - புலம்பிய அருந்ததிய மக்கள்!

ஆக்கிரமிப்பு

மயான நிலம் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மீட்டுத் தருமாறும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், இச்சிப்பாளையம் கிராமம் வாழநாயக்கன்பாளையம் காலனியில், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் வசித்துவருகின்றன. அவர்கள், காலம் காலமாகப் பயன்படுத்திவரும் மயான நிலம் மற்றும் மயான நடைபாதையை வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்புசெய்து, பிரச்னை செய்துவருகின்றனர். அவர்களிடமிருந்து மயான நிலங்களை மீட்டுத் தாருங்கள் எனச் சம்பந்தப்பட்ட காலனி மக்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

ஆக்கிரமிப்புஇதுகுறித்து வாழநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த வி.எஸ்.சண்முகம் என்பவர், “எங்கள் ஊருக்கு தெற்குப்புறம்  அரை கிலோமீட்டர் தூரத்தில், எங்கள் சமுதாய மக்கள் பயன்பாட்டுக்கென மயானம் ஒன்று உள்ளது. அதை நாங்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்திவருகிறோம். இந்நிலையில், அந்த மயானத்தைச் சுற்றியுள்ள நிலம் மற்றும் மயானத்துக்குச் செல்லும் சுமார் அரை கிலோமீட்டர் தூர நடைபாதை ஆகியவற்றை அருகிலுள்ள விவசாய நில உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புசெய்துள்ளனர். இதனால், இறந்தவர்களுடைய உடலை அடக்கம் செய்யச் செல்லும்போது, பல இடையூறுகள் ஏற்படுகின்றன. இதைக் கேட்டால், ‘பொறம்போக்கு நிலத்தை தானே எடுத்துக்கொண்டோம். நீங்க யார் கேக்குறதுக்கு’ என பிரச்னைக்கு வருகிறார்கள். சுடுகாட்டைக்கூட விட்டுவைக்காம இப்படிச் செஞ்சா எப்படி? எனவே, அதிகாரிகள் சர்வேசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்றார்.