வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (17/04/2018)

கடைசி தொடர்பு:07:58 (17/04/2018)

மணவாளக்குறிச்சி மணல் ஆலை மீண்டும் இயங்கக் காரணம் யார்? -குழப்பத்தில் குமரி மக்கள்!

மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை மீண்டும் செயல்பட காரணம் 'நான்'தான் என பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உரிமைகொண்டாடி வருகின்றனர்.

ணவாளக்குறிச்சியில் அரியவகை மணல் ஆலை மீண்டும் செயல்படக் காரணம் 'நான்தான்' எனப் பா.ஜ.க காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உரிமை கொண்டாடிவருகின்றனர்.

மணவாள குறிச்சி மணல் ஆலையை மீண்டும் இயக்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை, மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குமரி கடற்கரை மணலில் அரிய தாது வகைகள் இருப்பதைக் கண்டறிந்ததால், சுமார் 110 ஆண்டுகளுக்கு முன் இந்த மணல் ஆலை அமைக்கப்பட்டது. இந்த மணல் ஆலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி, கடந்த 2011 -ம் ஆண்டுடன் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அரசு நிறுவனம் என்பதால் அனுமதி பெறாமலே மணல் ஆலை இயங்கியுள்ளது. இந்த நிலையில், குமரி மாவட்ட கடற்கரைப் பகுதியில் தனியார் மணல் ஆலை நிறுவனமும் மணல் எடுத்து வந்தது. இதற்கு செக் வைக்கும் விதமாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடற்கரைப் பகுதியில் மணல் எடுக்கக் கூடாது என சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்பாடு விதித்தது. இதையடுத்து, தமிழக அரசும் தனது பங்குக்கு அரியவகை மணல் டிரான்ஸ்போர்ட்டிங் செய்ய அனுமதி மறுத்தது. இதனால், மணவாளக்குறிச்சி அரசு ஆலைக்கும் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மணல் ஆலைக்குள் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த மணலை வெளியே கொண்டுசெல்லமுடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு மண் எடுக்க அனுமதி அளித்தது.

மணல் ஆலை மீண்டும் துவங்க காரணமாக அமைந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பி.எம்.எஸ். தொழிலாளர்கள் பாராட்ட்டு விழா

தமிழக அரசு போக்குவரத்து அனுமதியும் அளித்தது. இதையடுத்து, இந்த மணல் ஆலை நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. அரியவகை மணல் ஆலையை அ.தி.மு.க குமரி மாவட்டச் செயலாளரும் மேல்சபை எம்.பி-யுமான விஜயகுமார் இன்று இயக்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "மணவாளக்குறிச்சி மணல் ஆலை மீண்டும் இயங்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த ஆலை  தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஆலை முன்பு நூற்றாண்டு வளைவு அமைக்கப்படும். ஆலைக்கான மணல் எடுக்கப்  பலர் நிலம் தர முன்வந்துள்ளார்கள். நானும் எனக்குச்  சொந்தமான நிலத்தை வழங்குகிறேன்" என்றார். இதைத்  தொடர்ந்து நேற்று மாலை மணவாளக்குறிச்சி மணல் ஆலை பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில், மீண்டும் இயங்க அனைத்து முயற்சியும் எடுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா' நடந்தது. இதில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் "மணவாளக்குறிச்சி மணல் ஆலை இயங்கத்  தேவையான அனைத்து அனுமதிகளையும் நான் கேட்டுக்கொண்டதன்பேரில் துறை அமைச்சர் வழங்கினார்" என்றார். இது ஒருபுறம் இருக்க, மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கான அனுமதியைப் பெற்றுத்தந்த விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., விஜயதரணிக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதனால், குமரி மாவட்டத்தின் ஒரே தொழிற்சாலையான மணவாளக்குறிச்சி மணல் ஆலை மீண்டும் செயல்பட உண்மையில் யார்  காரணம் எனக் குமரி மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.